ராஜீவ் அறக்கட்டளைக்கு சீன தூதரகம் நன்கொடை: காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே மோதல் விபரம்:-

Read Time:6 Minute, 56 Second

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜே.பி.நட்டா கூறிய குற்றச்சாட்டுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்து உள்ளார்.

லடாக்கில் இந்திய-சீன ராணுவ மோதல் விவகாரத்தில் மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவில் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை பெறப்பட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்திருந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இருகட்சிகள் இடையே மோதல் தொடர்கிறது.

பா.ஜனதா குற்றச்சாட்டு

பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா டுவிட்டர் பதிவுகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து சோனியா காந்தி குடும்பத்துக்கு சொந்தமான ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். தொடர்ச்சியான இக்குற்றச்சாட்டை முன்வைத்து டுவிட்டர்களில் தகவல்களை பதிவிடுகிறார்.

பொதுப்பணத்தை ஒரு குடும்பத்தின் அறக்கட்டளைக்கு திருப்பி விட்டது அப்பட்டமான மோசடி மட்டுமின்றி, மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் என்றும் குற்றம் சாட்டினார்.

சீனாவுடன் காங்கிரஸ் ரகசிய உடன்பாடு வைத்து இருப்பதாகவும், இதனால் சீன தூதரகம் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்கியுள்ளதாகவும் கூறி இருந்தார்.

‘சோனியா தலைமையிலான ராஜீவ் காந்தி அறக்கட்டளை கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2009 வரை சீன தூதரகத்திடம் இருந்து தொடர்ந்து நன்கொடைகளை பெற்றிருக்கிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தனது நேர்மையை நிரூபிப்பதுடன், சீன கம்யூனிஸ்டு கட்சியுடன் போட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் விவரிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

சீனாவுக்கும், ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கும் உள்ள தொடர்பை காங்கிரஸ் கட்சி விளக்குவதுடன், எங்கள் 10 கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் எனக்கூறிய ஜே.பி.நட்டா, தேசம் அறிய விரும்பும் இந்த கேள்விகளுக்கு சீனா ஊடுருவல் மற்றும் கொரோனாவை காரணம் காட்டி தப்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் பதில்

பா.ஜனதாவின் இந்நடவடிக்கையானது எல்லைப்பிரச்சினையை திசைத்திருப்பும் முயற்சியாகும் என காங்கிரஸ் குற்றம் சாட்டி பதில் கொடுத்து வருகிறது. முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் பதில் அளித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா பாதி உண்மையைத்தான் கூறியிருக்கிறார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 2005-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெற்ற பணம் அந்தமான் மற்றும் நிக்கோபாரில் சுனாமி நிவாரண பணிகளுக்காக செலவிடப்பட்டதாகும். அப்படி செலவிடப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு உள்ளது. ஆனால், அந்த உண்மையை பாரதீய ஜனதா மறைத்து இருக்கிறது. ஜே.பி.நட்டா உண்மையை பேசவேண்டும். கடந்த காலத்தில் நடந்ததை திரித்து பாதி உண்மையை மட்டும் பேசக்கூடாது.

எங்களுக்கு இந்திய நிலப்பகுதிக்குள் சீனா அத்துமீறி ஊடுருவியது ஏன்? என்பது பற்றிய கேள்விக்கு பதில் சொல்லுங்கள். ராஜீவ் காந்தி அறக்கட்டளை பணம் பெற்றதற்கும் சீன ஊடுருவலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பிரதமர் நிவாரண நிதியில் இருந்து பெற்ற ரூ.20 லட்சத்தை ராஜீவ் காந்தி அறக்கட்டளை திருப்பி கொடுத்துவிட்டால், லடாக்கில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் இருந்து சீனா வெளியேறும் என்றும், அங்கு முந்தைய நிலை திரும்பிவிடும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளிக்க தயாரா? எனக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஆற்றின் கரையையொட்டி சீனப்படைகள் குவிக்கப்பட்டு இருப்பதை காட்டும் வகையில் கடந்த மே 22-ம் தேதி மற்றும் ஜூன் 22-ம் தேதி ஆகிய இரு நாட்களில் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் படங்களையும் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

லடாக்கில் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்த விவகாரத்தில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பாரதீய ஜனதா செயல்படுவதாகவும், நமது நிலப்பகுதியை பாதுகாக்க சீனாவை எதிர்த்து போரிடுவதற்கு பதிலாக பா.ஜனதா காங்கிரசுடன் சண்டையிட்டு கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில் குற்றம்சாட்டி உள்ளார்.

சீன துதரகத்திடம் இருந்து 2005-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெற்ற ரூ.1 கோடியே 45 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், இந்தியா-சீனா நட்புறவு குறித்த ஆய்வுக்கும் செலவிடப்பட்டதாகவும், அதற்கு உரிய கணக்கு இருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இவ்விவகாரத்தில் காங்கிரஸ் – பா.ஜனதா இடையே கடுமையான மோதல் போக்கு தொடர்கிறது.