இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்து இருக்கிறது, 24 மணி நேரங்களில் மட்டும் 410 பேர் உயிரிழப்பு

Read Time:3 Minute, 35 Second

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து கொரோனா வைரஸ் பரவல் புதிய வேகம் எடுத்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 21-ம் தேதி வரை 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 5 லட்சத்து 28 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. இதன் மூலம் 7 நாட்களில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.

இந்தியாவில் முதலில் 1 லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க 110 நாட்கள் எடுத்து கொண்ட கொரோனா வைரஸ், தற்போது 39 நாட்களிலேயே 4 லட்சம் பேரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த மாதம் 1-ம் தேதியில் இருந்து நேற்று வரை மட்டும் 3 லட்சத்து 37 ஆயிரத்துத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை வெளியிடப்பட்ட புள்ளிவிவர பட்டியலில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் வரையில் வைரசினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரங்களில் புதியதாக 19,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை5,28,859 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,09,712 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 2,03,051 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரங்களில் புதியதாக வைரஸ் தொற்றுக்கு 410 பேர் உயிரிழந்து உள்ளனர். தனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 16,095 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1½ லட்சத்தை தாண்டி செல்கிறது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக இருக்கிறது. தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையானது 1025 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் 86 சதவீத பாதிப்பு 8 மாநிலங்களில் உள்ளது. மராட்டியம், டெல்லி, குஜராத், தமிழகம், தெலுங்கானா, உத்தரபிரதேசம், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் அதிகமான பாதிப்பை கொண்டிருக்கின்றன. இம்மாநிலங்களே மொத்த உயிரிழப்பிலும் 87 சதவீதத்தை கொண்டிருக்கிறது.