கொரோனா நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்தாக பார்க்கப்படும் ‘டெக்ஸாமெத்தாசோன்’ பற்றிய சிறப்பு தகவல்கள்….

Read Time:5 Minute, 33 Second

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘டெக்ஸாமெதாசோனை’, மெதில் பிரெட்னிசொலோனுக்கு மாற்றாக பயன்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதியளித்து உள்ளது.

டெக்ஸாமெத்தாசோன் ஒன்றும் புதிய மருந்தல்ல ஏற்கெனவே முடக்கு வாதம், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்டெராய்டு வகை மருந்து தான். மிக குறைந்த விலையில் பரவலாக கிடைக்கக் கூடிய ‘டெக்ஸாமெத்தாசோன்’ கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைக்க வல்லது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள கொரோனா சிகிச்சை வழிகாட்டும் நெறிமுறைகள்படி, வைரஸ் தொற்றின் மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு மெத்தில்பிரிட்னிசோலோன் மருந்து அரை மில்லிகிராம் முதல் 1 மில்லிகிராம் வரையிலும் அல்லது டெக்ஸாமெத்தாசோன் 0.1 மில்லிகிராம் முதல் 0.2 மில்லிகிராம் வரையில் 3 நாட்களுக்கு கொடுக்கலாம்.

மருத்துவமனையில் கோவிட்19 சிகிச்சைக்கு சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு காலதாமதம் இல்லாமல் 48 மணி நேரத்தில் தரலாம். ஆக்சிஜன் தேவை அதிகரித்தாலும் இந்த மருந்தை கொடுக்கலாம், இந்த மருந்தின் மூலம் அவர்களின் உயிரிழக்கும் வாய்ப்பு 20 முதல் 25 சதவிகிதம் வரை குறைகிறது.

நோயாளிகள் சுவாச கோளாறால் அல்லல்பட்டு வென்டிலேட்டரில் வைக்கிற தேவை எழுகிறபோது, ஏற்கனவே கொடுக்கப்படாத நிலையில், ஒரு நாளுக்கு மெத்தில்பிரிட்னிசோலோன் மருந்து 1 மில்லிகிராம் முதல் 2 மில்லிகிராம் வரையிலும் தரலாம் அல்லது டெக்ஸாமெத்தாசோன் 0.2 மில்லிகிராம் முதல் 0.4 மில்லிகிராம் வரையில் தரலாம். இரு பிரிக்கப்பட்ட அளவுகளில் இந்த மருந்தை 5 முதல் 7 நாட்களுக்கு தரலாம் என்று கூறியிருக்கிறது.

வென்டிலேட்டர் உதவி தேவைப்படும் வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு டெக்ஸாமெத்தாசோன் உதவி செய்வது தெரியவந்துள்ளது. மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு கொரானா வைரஸை எதிர்த்துப் போரிடும் போது அந்தப் போராட்டம் அளவு கடந்து செல்லும்போதுஅதுவே உடலுக்கு சேதம் ஏற்படுத்துவதாக மாறிவிடுகிறது.

நோய்க்கு எதிராக உடல் மற்றும் மிதமிஞ்சிய எதிர்வினைக்கு பெயர் ‘னசட்டோகைன் புயல்’ இந்த மிதமிஞ்சிய எதிர்வினை மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்த எதிர்வினையை இந்த மருந்து தடுப்பதற்கு உதவி செய்வதாக தெரிகிறது.

இந்த குளுக்கோகார்ட்டிகாய்டு மருந்தை அதிகளவில் கொடுத்தால், பெரிய அளவிலான நோய் எதிர்ப்பு தடுப்பு விளைவுகள் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றை அகற்றுவதை தாமதப்படுத்தி விடும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் சிகிச்சையில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ள டெக்ஸாமெத்தாசோன் மருந்தை கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு தரலாம் என்பதை சோதித்து கண்டறிந்த பெருமை, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகளுக்கு சேரும்.

கொரோனா வைரஸ் தொற்றால் அவதியுறுகிற நோயாளிகளுக்கு இது உயிர் காக்கும் மருந்தாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் வைரஸ் தொற்று தொடங்கிய காலத்திலிருந்தே இந்த மருந்தை பயன்படுத்தி இருந்தால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பாதுகாத்து இருக்க முடியும் என்கிறது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர்.

மிகப்பெரிய மருத்துவ விஞ்ஞான சாதனை என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டியதுடன், உடனடியாக அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தர ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இது வென்டிலேட்டர்களின் கீழ் வைக்கப்பட்ட நோயாளிகளின் இறப்புவீதத்தை மூன்றில் ஒரு பங்காக குறைத்து விடும் என்று உலக சுகாதார நிறுவனத்திடம் இங்கிலாந்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை காப்பதில் இந்த மருந்து முக்கிய பங்களிப்பு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.