சீனாவிற்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான் வியூகம்… அமெரிக்கவின் 8 நீர்மூழ்கி கப்பல்கள் ரகசியமாக ரோந்து…! சீன ராணுவத்துக்கு கடும் நெருக்கடி… விபரம்:-

Read Time:3 Minute, 3 Second

பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்து உள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு அந்த நாடு செயற்கை தீவுகளை அமைத்து உள்ளது.

தென் சீனக்கடலின் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுவதாலும், உலகின் 3–ல் ஒரு பங்கு கடல் போக்குவரத்து இந்த பகுதி வழியே நடைபெறுவதாலும் இது மிகவும் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

தென் சீனக்கடலில் சீனா உரிமை கொண்டாடி வருகிற வேளையில், ‘‘தென்சீனக் கடலில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது’’ என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இது தொடர்பாக ஐ.நா. சபையின் சட்டதிட்டங்களின்படி செயல்படுகிற சர்வதேச தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ் வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கில், ‘‘தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை’’ என்று தீர்ப்பு வந்தது.

இதனையடுத்து சீனா அந்தப் பிராந்தியத்தை சீர்குலைப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அமெரிக்காவும் இப்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க முன்வந்தது. இதனையடுத்து அங்கு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களையும் கொண்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் சீனக் கடல் பகுதிக்கு அமெரிக்க கடற்படையின் 3 போர்க் கப்பல்கள் அனுப்பப்பட்டு உள்ளது.

இதில் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் போர்க்கப்பல், சீனாவின் அதிநவீன போர்க்கப்பலைவிட 3 மடங்கு பெரிதாகும். அமெரிக்க கடற்படையின் 8 நீர்மூழ்கிகளும் தென்சீனக் கடலில் ரகசியமாக ரோந்து சுற்றி வருகின்றன. மேலும் சென்காகு தீவு பிரச்சினையால் ஜப்பான் ராணுவமும் சீனாவை குறிவைத்து ஏவுகணைகளை நிறுத்திவைத்து உள்ளது. அமெரிக்கா, ஜப்பானின் வியூகத்தால் சீன ராணுவத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்கா ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் இருந்து படைகளை வெளியேற்றி ஆசிய பிராந்தியத்தில் சீனாவினால் அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் நிலை நிறுத்த முயற்சியை மேற்கொள்கிறது. தெற்கு சீனக்கடல் பகுதிக்கும் அந்நாட்டு ராணுவம் விரையவிருக்கிறது என தகவல் வெளியாகியிருக்கிறது.