ஜூலை 27-ம் தேதி இந்தியா வருகிறது அதிநவீன ரபேல் போர் விமானங்கள்… ‘விரைவில் போருக்கு தயாராகும்…’

Read Time:4 Minute, 58 Second

இந்திய விமானப்படையை பலப்படுத்துவற்காக, ரூ.59 ஆயிரம் கோடி செலவில் அதிநவீனமான 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 36 விமானங்களில் முதல் விமானத்தை முறைப்படி 2019-ம் ஆண்டு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்சில் வைத்தில் பெற்றுக்கொண்டார். விமானத்தை இயக்குவது தொடர்பாக இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் பயிற்சியை வழங்கியது.

4 விமானங்கள் அடங்கிய ரபேல் போர் விமானங்களின் முதல் அணி, 2020-ம் ஆண்டு மே மாதம் இந்தியா வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டது. மொத்த எண்ணிக்கையான 36 விமானங்களும் இந்தியா வந்து சேர 2022-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப்படை வாங்கும் ரபேல் போர் விமானம், இரட்டை என்ஜின் கொண்ட ஜெட் போர் விமானம் ஆகும். விமானம்தாங்கி போர் கப்பலில் இருந்தும், கரையோர தளத்தில் இருந்தும் இயங்கும் ஆற்றல் வாய்ந்தது. இது முழுமையான பல்துறை விமானம் ஆகும். பிரான்ஸ் நாட்டின் ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அதி நவீன வசதிகளைக் கொண்ட போர் விமானம் ரபேல் ஆகும். அதனுடைய தமிழ் பொருள் நெருப்பின் வெடிப்பு என்பதாகும். இந்த விமானத்தை வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம்.

இதன் மூலம் இலக்குகளை மிக துல்லியமாக கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்க முடியும். அதி நவீன ரேடார் வசதிகளை கொண்ட இந்த விமானத்தை அவ்வளவு எளிதாக சுட்டு வீழ்த்திவிட முடியாது என்பது மிக முக்கியமான சிறப்பாகும். கடும் குளிர் நிலவும் காஷ்மீரின் லே போன்ற மலை உச்சிகளில் அமைந்து உள்ள விமான தளங்களில் இருந்துகூட இந்த விமானத்தை இயக்க முடியும். மேலும், இந்த விமானம் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் தொழில் நுட்பம் கொண்டது. குரல் வழி உத்தரவுகளை ஏற்றும் இதை இயக்கலாம் என்பன போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது.

தற்போது ரபேல் போர் விமானங்களின் முதல் அணி ஜூலை 27 அன்று பிரான்சின் இஸ்ட்ரெஸிலிருந்து அரியானாவின் அம்பாலா நகரத்திற்கு வந்து சேர்கிறது என்று தெரியவந்து இருக்கிறது. ஆரம்பக்கட்ட தகவலின்படி நான்கு, ஆறு ரபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவுக்கு வர உள்ளன. ரபேல் ஜெட் விமானங்களின் “கோல்டன் அரோஸ்” படை ஆகஸ்ட் மாதத்திற்குள் போருக்கு தயார் நிலையில் இருக்கும். ஏவுகணைகளை வீசி எதிரிகளின் நிலையை சிதறடிக்கும் வகையிலான “கேம் சேஞ்சர்” விமானங்கள் ஜூலை 27 அன்று இந்தியாவுக்கு வழங்கப்படுகிறது.

தெற்கு பிரான்சில் உள்ள இஸ்ட்ரெஸ் கம்யூனில் இருந்து இந்திய விமானிகளால் ரபேல் ஜெட் விமானங்கள் அரியானாவின் அம்பாலாவுக்கு கொண்டு வரப்படுகிறது. விமானங்கள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமானத்தளத்தில் மட்டும் இடையில் நிறுத்தப்படுகிறது. இந்த ஆண்டு நான்கு, ஆறு ரபேல் விமானங்கள் மட்டுமே வழங்கப்படுகையில், 36 போர் விமானங்களும் 2022 க்குள் வழங்கப்பட்டுவிடும்.

ரஃபேல் விமானங்களை கொண்ட படை இரண்டாக பிரிக்கப்படவிருக்கிறது. ரபேல் ஜெட் விமானங்களின் முதல் படை மேற்குப்பகுதியில் உள்ள அம்பாலாவிலிருந்து செயல்படும், மற்றொன்று மேற்கு வங்காளத்தின் ஹசிமராவில் இருந்து செயல்படும். ஏறக்குறைய இரண்டு மாதங்களாக லடாக் எல்லையில் இந்தியா, சீனாவுடன் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜூன் 15 அன்று வன்முறை வெடித்தது. இதனையடுத்து எல்லையில் பதற்றம் தொடர்கிறது. இந்நிலையில், ரபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வருகிறது.

இந்திய விமானப்படையின் சிறப்பு கோரிக்கையை ஏற்று பிரான்ஸ் விமானங்களை ஒப்படைப்பதில் தீவிரம் காட்டுகிறது.