“எல்லையில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது…” பிரதமர் மோடி பேச்சு விபரம்:-

Read Time:5 Minute, 30 Second

எல்லையில் இந்தியா – சீனா மோதலுக்கு மத்தியில் பிரதமர் மோடி நேற்று ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியினார். பிரதமர் மோடி பேசுகையில், சமீபத்தில் லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, லடாக்கில் இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டதாக சீனாவின் பெயரை குறிப்பிடாமல் குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில், இந்தியா நட்புறவை விரும்பும் நாடாகும். அனைத்து நாடுகளுடனும் நட்புடன் இருக்கவே விரும்புகிறது. இந்தியா தனது எல்லை மற்றும் இறையாண்மையை காப்பதில் உறுதிபூண்டு இருக்கிறது. இது, உலகிற்கு தெரியும். லடாக் எல்லையில் இந்திய மண்ணின் மீது கெட்ட நோக்கத்துடன் கண் வைத்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. நாம் நட்புறவை மதிக்கிறோம். அதேசமயம் இதுபோன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபடுவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் திறன் நமக்கு உள்ளது.

எல்லையில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. நாட்டின் பெருமைக்கு எந்த பங்கமும் ஏற்பட அனுமதிக்கமாட்டோம் என்பதை தீரமிக்க இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் நிரூபித்து உள்ளனர். அவர்களின் வீரமே நம் நாட்டின் பலமாகும். அவர்களுடைய தியாகம் என்றும் நினைவில் கொள்ளப்படும். உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் இந்திய தேசம் தலைவணங்குகிறது.

இந்திய வீரர்களின் தியாகம் தேசப்பற்றை மேலோங்க செய்து இருக்கிறது. உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் பெற்றோர்கள் தங்கள் மற்ற மகன்களையும் நாட்டை பாதுகாக்கும் பணிக்கு அனுப்ப விரும்புகிறார்கள். பீகாரை சேர்ந்த சாகீத் குந்தன் குமார், தாய்நாட்டை பாதுகாப்பதற்காக தனது பேரனையும் ராணுவத்தில் சேர்க்க விரும்புவதாக கூறியிருக்கிறார். அனைத்து துறைகளிலும் தற்சார்பு அடைய வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நோக்கமாகும்.

தற்சார்பை நோக்கி இந்தியா முன்னேறுகிறது. எனவே, இதனால் உள்நாட்டு உற்பத்திக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது. அனைவரும் உள்நாட்டில் தயாராகும் பொருட்களையே வாங்க வேண்டும். இதுவே, வீரமரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். ஒவ்வொருவரும் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நாட்டை நாம் பலப்படுத்த முடியும். மக்களின் ஒத்துழைப்பு இன்றி எந்தஒரு திட்டமும் வெற்றி பெறாது.

கிழக்கு லடாக்கில் நடந்த சம்பவத்தை பார்த்த பிறகு, இனி இந்தியாவில் தயாராகும் பொருட்களை மட்டுமே வாங்குவது என தீர்மானித்து இருப்பதாக அசாம் மாநிலத்தை சேர்ந்த ரஜ்னிஜி என்ற பெண் கடிதம் எழுதி இருக்கிறார். இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எனக்கு தகவல்கள் வந்து இருக்கின்றன.

மதுரையைச் சேர்ந்த மோகன் ராமமூர்த்தி எழுதியுள்ள கடிதத்தில், பாதுகாப்பு துறையில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்து உள்ளார். இப்போது ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப துறையில் தன்னிறைவை அடைவதற்கான நடவடிக்கைகளை இந்திய தீவிரமாக மேற்கொண்டு இருக்கிறது. சுரங்கம், விண்வெளி ஆய்வு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்களை செய்து உள்ளோம்.இந்த சீர்திருத்தங்கள் இந்தியா தன்னிறைவை நோக்கி செல்வதற்கும், தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடையவும் வழிவகுக்கும் என பிரதமர் மோடி பேசினார்.

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சமயத்தில் மக்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்க வேண்டும். ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரும் மிகவும் கவனத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை முறியடிப்பதோடு, பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.