கொரோனா வைரசிருந்து பாதுகாப்பாக இருக்க ‘ஆரோக்கிய சந்தேஷ்’ ஸ்வீட்..! மேற்கு வங்காள அரசு புதிய முயற்சி

Read Time:4 Minute, 13 Second

இந்தியா முழுவதுமே பெங்கால் ஸ்வீட்டுக்கு என்று ஒரு தனிப்பெருமையான சிறப்பு இருக்கிறது. எந்தஒரு முக்கியமான விழாவாக இருந்தாலும், நிகழ்ச்சியாக இருந்தாலும் அதையொட்டி சிறப்பு ஸ்வீட்களை தயாரித்து சந்தைக்கு கொண்டுவருவது மேற்கு வங்காள மாநில மக்களின் இயல்பாக இருக்கிறது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வகையிலான ‘ஆரோக்கிய சந்தேஷ்’ ஸ்வீட் அங்கு பயன்பாட்டிக்கு வந்துள்ளது.

வழக்கமாக சிறப்பு ஸ்வீட் தயாரிக்கும் பணியில் கடை உரிமையாளர்கள் களத்தில் இறங்குவார்கள். ஆனால் இம்முறையில் மேற்கு வங்காள மாநில அரசே ஸ்வீட் தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவும் இக்காலக்கட்டத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வகையில், “ஆரோக்கிய சந்தேஷ்” என்ற ஸ்வீட்டை அரசு அறிமுகப்படுத்துகிறது.

சுந்தரவனக்காடுகளில் கிடைக்கும் தேன் மிகவும் மருத்துவ குணமும், உயர்ந்த தரமும் கொண்டவையாகும். இப்போது அந்த தேனைக் கொண்டு இந்த ஸ்வீட் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஸ்வீட்டில் சிறப்பு ஸ்பெஷலாக செயற்கையாக எந்தஒரு பொருட்களும் சேர்க்கப்படவில்லை. சர்க்கரைகூட சேர்க்கப்படாமல் முற்றிலும் தேன் மூலம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. தேன், பசுவின் பாலில் இருந்து எடுக்கப்பட்ட பாலாடை, துளசி ஆகியவை மூலம் மட்டுமே இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது. கொரோனா வைரசை தடுக்கும் மருந்தாக இன்றி, அதிலிருந்து பாதுகாப்பாக இருக்க மக்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஸ்வீட் என்று கூறி இந்த ஆரோக்கிய சந்தேஷை அறிமுகப்படுத்த உள்ளது அரசு.

இதுகுறித்து சுந்தரவனக்காடுகள் துறை அமைச்சர் மந்துராம் பகிரா பேசுகையில், “சுந்தரவனக் காடுகளில் இருந்து கிடைக்கும் தேன் மிகவும் அதிகமான மருத்துவ குணமுடையது. அது, தரத்திலும் உயர்வானது. அந்தத் தேன், பசுவின் பாலில் இருந்து எடுக்கப்படும் பாலாடை, துளசி ஆகியவை மூலம் ஆரோக்கிய சந்தேஷ் இனிப்பு தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த இனிப்பு கொரோனா வைரஸை தடுக்காது. இருப்பினும், மனிதனின் உடலுக்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்,” எனக் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் இதுதொடர்பாக விளக்கமாக பேசுகையில், சுந்தரவனக்காடுகளில் உள்ள பிர்காலி, ஜார்காலி ஆகிய அடர்ந்த காடுகளில் இருந்து தேன் கொண்டுவரப்பட்டு, மிகவும் நவீன முறையில் பாதுகாக்கப்படுகிறது. பின்னர் அதனைக்கொண்டு ஸ்வீட் செய்யப்படுகிறது. அடுத்த இரு மாதங்களில் அனைத்து மக்களுக்கும் எளிதில் வாங்கும் விலையில் இந்த ஸ்வீட் விற்பனை செய்யப்படும். முதல்கட்ட விற்பனை விரைவில் தொடங்கும் என கூறியிருக்கிறார்.

இம்மாத தொடக்கத்தில் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற தனியார் ஸ்வீட் கடையொன்று மஞ்சள், துளசி, ஏலக்காய் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் மற்றும் இமாலய தேனை கொண்டு நோய் எதிர்ப்பு சக்தி சந்தேஷ் என்ற இனிப்பை அறிமுகம் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.