கல்வி நிறுவனங்களை காலி செய்யவும்… காஷ்மீரில் 2 மாதத்துக்கு தேவையான கியாஸ் சிலிண்டர்களை இருப்பு வைக்கவும்… அரசின் உத்தரவால் பீதி

Read Time:3 Minute, 16 Second

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் கடந்த ஆண்டு அங்கு கொந்தளிப்பான நிலை நேரிட்டது. தற்போது அங்கு நிலவிய கொந்தளிப்பு தணிந்து இருக்கிறது. இந்நிலையில் அம்மாநில அரசின் சமீபத்திய 2 உத்தரவுகள், அம்மாநில மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளன.

அதாவது, கடந்த 23-ம் காஷ்மீர் கவர்னர் ஜி.சி.மர்முவின் ஆலோசகர், “நிலச்சரிவு காரணமாக, தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு உள்ளது. எனவே, சமையல் கியாஸ் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், போதிய சிலிண்டர்களை இருப்பு வைக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார். இதையடுத்து, அம்மாநில உணவு மற்றும் பொது வினியோக துறை இயக்குனர் வெளியிட்ட உத்தரவில், “2 மாதங்களுக்கு தேவையான கியாஸ் சிலிண்டர்களை எண்ணெய் நிறுவனங்கள் குடோன்களில் இருப்பில் வைத்திருக்க வேண்டும். இது மிகவும் அவசர உத்தரவாகும்“ என்று கூறியிருக்கிறார்.

மேலும் அம்மாநில கந்தர்பால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு “அமர்நாத் யாத்திரையையொட்டி, மத்திய ஆயுத போலீஸ் படையினர் தங்குவதற்காக, மாவட்டத்தில் உள்ள 16 கல்வி நிறுவனங்களை காலி செய்து ஒப்படைக்க வேண்டும்“ என்று உத்தரவிட்டு இருக்கிறார். லாடக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும்போது இந்த இரண்டு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், சீன விவகாரத்துடன் இவற்றை முடிச்சுப்போட்டு மக்கள் பாார்த்து பீதியில் உள்ளனர்.

பெரும்பாலும் காஷ்மீரில் குளிர்காலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, சமையல் கியாஸ் வினியோகம் பாதிக்கப்படும் என்பது காஷ்மீரில் இயல்பானது ஒன்றாகும். ஆனால், இப்போது இது கோடை காலம் ஆகும்.. இப்போது அரசு இதுபோன்று உத்தரவிட்டு இருப்பது மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழ செய்து இருக்கிறது.

அம்மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் செய்தியில், இந்த 2 உத்தரவுகளும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட சமயத்தில் அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் பொய் என்று நிரூபணமாகி விட்டன. எனவே, அரசின் விளக்கங்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது. இருப்பினும், அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். அங்கு கல்வி நிறுவனங்களை காலி செய்யும் உத்தரவையும் மக்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்.