இந்தியாவிடம் மோதிக்கொண்டு எல்லையில் சீனா அமைத்த சாலையை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது… சீன வீரர்கள் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறினர்…! புதிய தகவல்கள்:-

Read Time:2 Minute, 27 Second

லடாக்கின் கிழக்கே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ம் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இருதரப்பும் எல்லையில் படைகளை குவித்து கண்காணிப்பை அதிகரித்து உள்ளது.

எல்லையில் அடாவடியில் ஈடுபடும் சீன ராணுவம் அங்கு சாலைகள் அமைப்பு மற்றும் பதுங்குழிகள் அமைப்பு போன்ற கட்டமைப்பில் ஈடுபடுவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுவதாக மீடியாக்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டன.

இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் சீன ராணுவம் அமைத்த சாலையானது ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அடித்துச் செல்லப்பட்டது என செய்தி வெளியாகியிருக்கிறது.

இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் வெடித்து 10 நாட்கள் கழித்து ஜூன் 25-ம் தேதி Planet Labs எடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் இதனை சுட்டிக்காட்டுகிறது.

இதற்கிடையே பள்ளதாக்குப்பகுதியில் ஆற்றில் அதிகமாக தண்ணீர் செல்வதால் அப்பகுதியில் ராணுவ வீரர்களை வெளியேற்றியிருக்கிறது என்பதையும் அந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.

ஆற்றின் அகலத்தை செயற்கையாக குறைக்க சீனப்படைகள் முயற்சியை மேற்கொண்டுள்ளன. இதற்கான கட்டமைப்புகளை ஆற்று வெள்ளம் அடித்து சென்றதை பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன, மேலும் அப்பகுதியானது தண்ணீரில் மூழ்கியுள்ளது. சீனாவின் அடாவடிக்கு இயற்கையும் பதிலடியை கொடுத்து இருக்கிறது. அப்பகுதியில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது.

சீனப்படைகளின் வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டு இருக்கிறது.