உத்தரபிரதேசத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தாய்மொழியான ‘இந்தி’யில் 8 லட்சம் மாணவர்கள் ஃபெயில்…!

Read Time:2 Minute, 36 Second

இந்தியை தாய்மொழியாக பேசும் உத்தரபிரதேச மாநிலத்தில் அப்பாடத்தில் 8 லட்சம் மாணவர்கள் ஃபெயில் ஆனார்கள் என்ற செய்தி இவ்வாண்டும் வெளியாகியிருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசுப் பொதுத்தேர்வு எழுதிய 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் ‘ரிசல்ட்’ நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் இந்தி மொழி பேசும் மிகப்பெரிய மாநிலத்தில் இந்தி மிகவும் சிக்கலான பாடமாகியிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது, ஏனெனில் இரண்டு வகுப்புகளை ( 10 மற்றும் 12-ம் வகுப்பு) சேர்ந்த கிட்டத்தட்ட 8 லட்சம் மாணவர்கள் தங்கள் இந்தி தேர்வில் தோல்வியை தழுவியிருக்கிறார்கள் என்பது தெரியவந்து இருக்கிறது.

உ.பி.யில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 2.70 லட்சம் மாணவர்கள் தங்கள் இந்தி தேர்வில் தோல்வியை தழுவியிருக்கிறது. 10-ம் வகுப்பு தேர்வில் 5.28 லட்சம் மாணவர்கள் இந்தி தேர்வில் தோல்வியடைந்தனர். அவர்களை தவிர, மொத்தம் 2.39 லட்சம் மாணவர்களும் தங்கள் இந்தி தேர்வை தவிர்த்ததாக அம்மாநில தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது, இந்தி மொழி தேர்வுத்தாள் எவ்வளவு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது.

உ.பி.யில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வை சுமார் 59.6 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். 10-ம் தேர்வை சுமார் 30 லட்சம் மாணவர்களும், 12-ம் வகுப்பு தேர்வை சுமார் 25 லட்சம் மாணவர்களும் எழுதியுள்ளனர். இதில் எல்லாவற்றிற்கும் மேலாக, எதிர்கால வாய்ப்புகள் இல்லாமல் ஒரு மொழியை படிப்பது அவசியமில்லை என்று இந்த நாட்களில் மாணவர்கள் நம்புகிறார்கள்.

2019-ம் ஆண்டும் உ.பி.யில் நடைப்பெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தி மொழிப் பாடத்தில் தோல்வியையே தழுவியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.