இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைகிறது… ‘69ஏ சட்டம் பிரிவுயின் கீழ் 59 சீனா செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை…

Read Time:5 Minute, 17 Second

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உள்ளது.

லடாக்கில் இந்தியா – சீன ராணுவ வீரர்கள் மோதலை அடுத்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் மத்திய அரசு அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

செல்போன் பயனாளர்கள் குறிப்பாக ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் பொழுதுபோக்கு, பல்வேறு தேவைகளுக்காக ஏராளமான செயலிகளை பதிவிறக்கம் செய்கிறார்கள். இதில் சீன செயலிகளும் இடம்பெறுகிறது. இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளில் பல பயனாளர்களின் பிற தகவல்களை திருடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

சீனா செயலிகளான ‘டிக் டாக்’, ‘வி சாட்’ உள்ளிட்ட ஏராளமான செயலிகளும் சமீப காலங்களில் செல்போன் பயனாளர்களிடம் பெரும் ஆதரவு பெற்று வருகின்றன. அதிலும் ‘டிக் டாக்’ செயலி இளசுகளின் உளம் கவர்ந்த செயலிகளில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இச்செயலி ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளில் மூழ்கி எழுந்தது. இப்போதும், இவ்வரிசையில் முதன்மையாக வந்திருக்கிறது.

இந்த செயலிகளால் தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக சமீபகாலமாக புகார்கள் எழுந்து உள்ளன. இதைத்தொடர்ந்து ‘டிக் டாக்’, ‘வி சாட்’ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயக்க முறைமை கொண்ட செல்போன்களில் பயன்படுத்தப்படும் சில செயலிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்திருக்கிறது.

குறிப்பாக பயனாளர்களின் தரவுகளை திருடி இந்தியாவுக்கு வெளியே இருக்கும் சர்வர்களுக்கு அனுப்புவதாக புகார்கள் எழுந்து உள்ளன. இவ்வாறு திருடப்படும் தகவல் தொகுப்பால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைகிறது. இது இந்திய இறையாண்மை, ஒருமைப்பாட்டையும் பாதிக்கிறது. இது உடனடியாக சரிசெய்ய வேண்டிய விவகாரம் என்பதால் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது.

மேலும் தீங்கிழைக்கும் இந்த செயலிகளை தடை செய்யுமாறு இந்திய சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தில் இருந்து பரிந்துரைகள் வந்து இருக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், இந்த செயலிகளால் இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவதாக சமீபத்தில் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையிலும் இந்த செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, செல்போன் மற்றும் செல்போன் அல்லாத பிற இணைய பயன்பாட்டு கருவிகளிலும் இந்த செயலிகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்திய சைபர் வெளியில் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கை, கோடிக்கணக்கான இந்திய செல்போன் மற்றும் இணையதள பயனாளர்களை பாதுகாக்கும் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

லடாக் மோதலை தொடர்ந்து ‘டிக் டாக்’ உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்ய வேண்டும் என இந்தியாவில் கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69-ஏ-யின் கீழ் தன் அதிகாரத்தை செயல்படுத்தி உள்ளதாக அமைச்சக அறிவிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட 59 செயலிகளின் பட்டியல்:-

 • TikTok
 • Shareit
 • Kwai
 • UC Browser
 • Baidu map
 • Shein
 • Clash of Kings
 • DU battery saver
 • Helo
 • Likee
 • YouCam makeup
 • Mi Community
 • CM Browers
 • Virus Cleaner
 • APUS Browser
 • ROMWE
 • Club Factory
 • Newsdog
 • Beutry Plus
 • WeChat
 • UC News
 • QQ Mail
 • Weibo
 • Xender
 • QQ Music
 • QQ Newsfeed
 • Bigo Live
 • SelfieCity
 • Mail Master
 • Parallel Space
 • Mi Video Call — Xiaomi
 • WeSync
 • ES File Explorer
 • Viva Video — QU Video Inc
 • Meitu
 • Vigo Video
 • New Video Status
 • DU Recorder
 • Vault- Hide
 • Cache Cleaner DU App studio
 • DU Cleaner
 • DU Browser
 • Hago Play With New Friends
 • Cam Scanner
 • Clean Master – Cheetah Mobile
 • Wonder Camera
 • Photo Wonder
 • QQ Player
 • We Meet
 • Sweet Selfie
 • Baidu Translate
 • Vmate
 • QQ International
 • QQ Security Center
 • QQ Launcher
 • U Video
 • V fly Status Video
 • Mobile Legends
 • DU Privacy