லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவம் இடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இந்தியாவின் முப்படைகளும் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பை தொடங்கின. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
எனவே, அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு இந்திய கடற்படை கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து 2 வாரங்களாக இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறது. பாதுகாப்புக்காக இந்திய பெருங்கடலில் கப்பல்களை நிலை நிறுத்தி உள்ளது. சீன கப்பல்களின் நடமாட்டத்தை கண்டறிவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க, ஜப்பான் கடற்படைகளுடன் இந்திய கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்தி இருக்கிறது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது ராணுவ பலத்தை விஸ்தரிக்க சீனா முயன்று வருகிறது. இதனால் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படைகள் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.