இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2-வது நாளாக குறைந்தது… குணம் அடைபவர்கள் விகிதமும் அதிகரிப்பு…

Read Time:2 Minute, 18 Second

இந்தியாவில் தொடர் ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகளால் கொரோனா வைரசின் வேகத்துக்கு கடிவாளம் போட முடியவில்லை.

இந்தியாவில் இப்போது கொரோனா மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து நேற்று வரையிலான 29 நாட்களில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 783 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 18,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களில் தினசரி பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையானது குறைந்து இருக்கிறது.

இந்தியாவில் ஞாயிறு அன்று புதியதாக 19,906 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இது திங்கள் கிழமை 19,459 ஆக குறைந்தது, இன்று 18,522 ஆக குறைந்து இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,66,840 ஆக அதிகரித்து உள்ளது. இதற்கிடையே வைரஸ் தொற்றிலிருந்து குணம் அடைபவர்கள் விகிதமானது 59.06 ஆக அதிகரித்து இருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 3,34,821 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2,15,125, பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரங்களில் 13,099 பேர் குணம் அடைந்து உள்ளனர். குணம் அடைந்த நோயாளிகளுக்கும் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கும் இடையிலான இடைவெளி 1.19 லட்சமாக உயர்ந்துள்ளது.

இருப்பினும், கொரோனா வைரஸ் கடந்த 24 மணி நேரங்களில் 418 பேரின் உயிரையும் இந்த ஆட்கொல்லி வைரஸ் பறித்து உள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 16,893 ஆக உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் 1,141 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.