சீனாவில் ஆபத்தான புதிய பன்றிக்காய்ச்சல் வைரஸ் தாக்குதல்… மற்றொரு தொற்றுநோய் பரவலுக்கு வழிசெய்யலாம் என அச்சம்… முழு விபரம்:-

Read Time:4 Minute, 44 Second

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. அனைத்து மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுள்ளது. இந்த வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் உலக நாடுகள் அதன் முன் மண்டியிட்டுள்ளன. இந்த போராட்டமே முடியாத நிலையில் மற்றொரு தொற்றுநோய் பரவலா…? அதுவும் சீனாவிலிருந்தா…? என்ற கேள்வியை எழச்செய்துள்ளது சமீபத்திய தகவலானது.

சீனாவில் புதியதாக வைரஸ் ஒன்று மனிதர்களை தாக்குகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இதனை உடனடியாக நிறுத்தவில்லை என்றால் இது மேலும் ஒரு ப்ளூ வைரஸ் போன்ற தொற்றை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

2009-ம் ஆண்டு பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவியது போன்று பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. கொரோனாவுடன் போராட வழி தெரியாத நேரத்தில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பானது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வைரஸ் பரவலானது தொற்று பரவல் போன்ற நெருக்கடியை உலகம் முழுவதும் ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்து இருக்கிறது.

சீனாவில் பன்றிகள் மத்தியில் ஒரு புதுவிதமான வைரஸ் ஒன்று பரவி வருகிறது. இந்த வைரஸ் மனிதர்களையும் தாக்கும், கொரோனா வைரஸ் போன்று பெரும் தொற்றாகவும் வெடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Proceedings of the National Academy of Sciences-ல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு கட்டுரையில் புதிய வைரஸ் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த வைரசுக்கு G4-EA H1N1 எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இப்போது வெளியாகியிருக்கும் இவ்வைரஸ் இன்ப்ளூயன்சா வைரஸ் போன்றது. விஞ்ஞானிகள் புதிய வைரசானது சிறந்த நோய் அச்சுறுத்தல்களில் ஒன்றாக அடையாளம் கண்டு உள்ளனர். முற்றிலும் புதிய வைரஸ் மூலமாக வரும் நோயை எதிர்க்கொள்ளும் வகையில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது. இப்போது உலகம் போராடிக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அதற்கு ஒரு கொடிய சான்று.

இந்த வைரசினால் அதிகமான பாதிப்பு அடுத்த தலைமுறைக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கையை விடுக்கின்றனர்.

இப்போது பன்றிகளில் காணப்படும் G4-EA H1N1 வைரஸ்களை கட்டுப்படுத்துதல் மற்றும் மனித தொற்று தொடர்பக நெருக்கமாக கண்காணிப்பது, குறிப்பாக பன்றி வளர்ப்பு தொழிலில் உள்ள தொழிலாளர்களை சோதிப்பது மிகவும் அவசரமாக செயல்படுத்தப்பட வேண்டிய திட்டமாகும் என விஞ்ஞானிகள் பரிந்துரைத்து உள்ளனர்.

இந்த புதிய வைரஸ் மனித ஆரோக்கியத்திற்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. இருப்பினும் வைரஸ் சுவாசக் குழாயில் (மூக்கு முதல் நுரையீரல் வரையில்) மிக வேகமாக வளர்ந்து பெருக்கக்கூடும் என எச்சரிக்கை எழுந்து இருக்கிறது. சீனாவில் பன்றி தொழில் மையத்தில் அண்மையில் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரங்களை அவர்கள் கண்டுபிடித்ததால் அவர்களின் பயம் தவறாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்செயலாக, சில சீன ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து இதேபோன்று மற்றொரு சுகாதார நெருக்கடி தொடரலாம் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 1 கோடிக்கு மேற்பட்ட மக்களைப் பாதித்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்து விசாரிக்க உலக சுகாதாரத்துறை அந்த நாட்டிற்கு ஒரு குழுவை அனுப்பத் தயாராகி வரும் இந்நேரத்தில் சீனாவில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.