சாத்தான்குளம் சம்பவம் நிர்பயா வழக்கை விட கொடூரமானது, குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் – முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஆவேசம்

Read Time:2 Minute, 42 Second

சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்ட செல்போன் கடை வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த சம்பவத்துக்கு எதிராக விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர்-நடிகைகள் குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது.

இந்நிலையில் சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் உயிரிழந்த சம்பவம் டெல்லி நிர்பயா கற்பழிப்பு வழக்கை விட கொடூரமானது என ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்து உள்ளார்.

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கியது போல சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய களுக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் நிர்பயாவின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுளைத்தது போலவே, சாத்தான்குளம் சம்பவத்திலும் பென்னிக்சின் ஆசன வாயில் தடியை சொருகிய கொடூரம் நிகழ்த்தப்பட்டு உள்ளது.

இதில் கவனிக்க வேண்டியது நிர்பயா சம்பவம் தனிநபர் அதாவது பொது மக்களில் சிலரால் செய்யப்பட்டது. ஆனால், இங்கேயோ சட்டத்தை நிலை நிறுத்துவதையும் குடிமக்களை பாதுகாப்பதையும் கடமையாக கொண்ட போலீஸ்காரர்களால் செய்யப்பட்டு இருக்கிறது. குற்றங்கள் சாதாரண மக்களால் செய்யப்பட்டால், சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஆனால், காவல்துறையினரால் குற்றம் செய்யப்பட்டால், அவர்கள் கடமைகளுக்கு முற்றிலும் முரணான செயலை செய்தால், அவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டால், சாத்தான்குளம் வழக்கிலும் சம்பந்தப்பட்ட போலீசார் குற்றவாளிகளாக இருந்தால் தூக்கிலிடப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.