லடாக் எல்லையில் படைகளை குவிக்கும் சீனா… நீண்ட நாள் மோதலை சமாளிக்கும் வகையில் இந்தியாவும் படைகளை குவிக்கிறது…!

Read Time:2 Minute, 58 Second

கிழக்கு லாடக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா தனது படைகளை குவித்து இருக்கிறது. எல்லையில் போர் பதற்றத்தை தணிக்கவும், சீனப்படைகள் வெளியேறுவது தொடர்பாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இருப்பினும் சீனா அதன் படை வீரர்களின் வலிமையை குறைக்கவில்லை. இப்போதும் கசப்பான நிலையிலே மோதல் போக்கானது தொடர்ந்து இருந்து வருகிறது.

திபெத் மற்றும் ஜின்ஜியாங் மாகாணத்தில் எல்லையில் சீனப் படைகளின் நடமாட்டம் குறித்து இந்திய பாதுகாப்பு படையினர் ஒரு பருந்து பார்வையில் கண்காணித்து வருகின்றனர். அங்கு கூடுதலாக 10,000 வீரர்கள் சில காலமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“நம்முடைய எல்லைகளில் 20,000 படைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. வடக்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் கூடுதல் சீனப்படையினர் கொண்டுவரப்பட்டு உள்ளனர். அவர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்திய எல்லைக்கு கொண்டு வரப்படலாம்” என்று அரசு வட்டார உயர்மட்ட தகவல்கள் தெரிவிப்பதாக இந்தியா டுடே இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

எல்லையில் சீன இராணுவத்தின் நோக்கம் குறித்து இந்தியா ஒரு சந்தேகத்தை கொண்டிருக்கிறது. எனவே கூடுதல் படைகள் குவிப்பு விவகாரத்தில் இந்தியா இப்போது ஒரு கண்ணை வைத்திருக்கிறது.

இப்பிராந்தியத்தில் சீனாவின் அடாவடி நடவடிக்கைகளை எதிர்க்கொள்ள இந்தியாவும் குறைந்தது இரண்டு கூடுதல் காலாட்படை பிரிவுகளையும் எல்லையில் நிறுத்தியுள்ளது. இந்தியாவும் தனது படை வீரர்களை வானிலைக்கு ஏற்ற உடைகளுடன் நீண்ட காலத்திற்கு மோதலை எதிர்க்கொள்ளும் வகையில் அங்கு அனுப்பி வருகிறது என அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

எல்லையில் சீனப் பணியை எதிர்ப்பதற்காக லடாக் பகுதியில் கூடுதல் டாக்கிகள் மற்றும் கவச ரெஜிமென்ட்களை இந்தியா நகர்த்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பிபி -15 போன்ற பகுதிகளில் சீனர்கள் மையமிட்டுள்ள பகுதிக்கு எதிரே டாங்கிகள் முன் வரிசையில் வலதுபுறமாக நகர்த்தப்பட்டு உள்ளன. சீனா ஆதிக்கம் செலுத்துவதை முறியடிக்கும் வகையில் படையின் பலம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.