சீன எல்லையில் டி -90 பிஷ்மா டாங்கிகளை நிலை நிறுத்தும் இந்தியப்படை…!

Read Time:3 Minute, 12 Second

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவம் இடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவின் முப்படைகளும் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பை தொடங்கின. எல்லையில் பதற்றம் காரணமாக இந்திய ராணுவம் படைகளை நிலை நிறுத்தியிருக்கிறது.

இதற்கிடையே எல்லையில் பதற்றத்தை தணிக்கவும், படைவீரர்களை வாபஸ் பெறவும் வழி காண இருதரப்பு மூத்த ராணுவ கமாண்டர்கள் நிலையில் பேச்சுவார்த்தையும் நடக்கிறது.

இருப்பினும், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.

கல்வான் பள்ளத்தாக்கின் ஆற்றுப்படுகையில் கூடாரங்கள் அமைத்து பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், தளவாடங்களுடன் சீன ராணுவம் நிலை கொண்டு உள்ளது. இதனால் அதற்கு நிகராக இந்தியாவும் தயாராகிறது. கிழக்கு லடாக் பகுதியின் 1,597 கி.மீ. தொலைவு எல்லை கோடு பகுதி நெடுகிலும் சக்திவாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகள் மற்றும் பீரங்கி தகர்ப்பு ஆயுதங்கள், போர் வாகனங்கள் என ஏராளமான தளவாடங்கள் குவிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக எல்லையில் ஸ்பாங்குர் பகுதி வழியாக சீனா தாக்குதல் நடத்தும் திட்டம் வைத்திருந்தால் அதை முறியடிக்க சுஷுல் பகுதியில் 2 பீரங்கி படைகளை இந்தியா நிறுத்தி உள்ளது.

இந்தியா நிறுத்தியுள்ள டி-90 பீஷ்மா பீரங்கிகள் சக்தி வாய்ந்தவையாகும். இதில் இருந்து பாயும் ஏவுகணை குண்டுகள் வெகுதொலைவுக்கு சென்று இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. அதேபோல, ஹோவிட்சர் ரக பீரங்கிகளும் ஏராளமாக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும், தோளில் சுமந்தபடி எதிரியின் பீரங்கிகளை தகர்க்கும் ஆயுதங்களும் தயார் நிலையில் குவிக்கப்பட்டு உள்ளன.

இப்பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற உண்மையான எல்லைக்கோடு தொடர்பாக பேசித் தீர்வு காண சீனா முன்வந்து இருக்கிறது. ஆனால், உண்மையான எல்லை கோடு நிர்ணயம் பற்றி மறுவரையறை செய்திடும் நோக்கத்தில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் ஒரு அங்குலம் நிலப்பகுதியையும் விட்டு தருவதில்லை என இந்திய ராணுவம் உறுதியுடன் தெரிவித்து இருக்கிறது. நிலைமை மோசமாகி நீண்ட காலத்துக்கு நீடித்தாலும் அதை முழு பலத்துடன் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக ராணுவ தளபதிகள் கூறியிருக்கின்றனர்.