எல்லையில் பதற்றம்: இஸ்ரேலிடம் இருந்து SPICE-2000 குண்டுகளை வாங்குகிறது இந்திய விமானப்படை…

Read Time:2 Minute, 21 Second

எல்லையில் சீனா அடாவடி போக்கில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்திய விமானப்படை, இஸ்ரேலிடம் இருந்து அதிகமான SPICE-2000 குண்டுகளை வாங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

“ஸ்பைஸ் -2000 குண்டுகள் தரையில் உள்ள இலக்குகளை நீண்ட தூரத்திலிருந்து தாக்கும் திறனை கொண்டவையாகும். எதிரிகளின் பதுங்கு குழிகளையும், கட்டிடங்களையும் தகர்க்கும் திறனை வழங்கும்” என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இஸ்ரேலில் இருந்து வாங்கிய குண்டுகளைவிட கூடுதலாக குண்டுகள் வாங்கப்படுகிறது.

இந்த குண்டுதான் இந்திய விமானப்படையால் 2019-ம் ஆண்டு பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டது.

2019-ல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்க இந்திய விமானப்படை இஸ்ரேல் உருவாக்கிய ஸ்பைஸ் -2000 குண்டுகளையே பயன்படுத்தியது. ஸ்பைஸ் என்பது ஸ்மார்ட், துல்லியமான தாக்கம், செலவு குறைந்ததை குறிக்கிறது. ஸ்பைஸ் -2000 குண்டுகள் மிராஜ் -2000 ஜெட் விமானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவ்விமானங்கள் மேலும் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.

வானிலிருந்து நிலத்தில் துல்லியமான தாக்குதலை மேற்கொள்ளும் பணியில் விமானப்படையால் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி அரசு பாதுகாப்பு படைகளுக்கு அவசர நிதி அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. இதன் கீழ் அவர்கள் 500 கோடிக்கு கீழ் எந்த ஆயுத அமைப்புகளையும் வாங்க முடியும். இவை விமானப்படை துணை தலைவரின் அவசரகால அதிகாரங்களின் கீழ் கொள்முதல் செய்யப்படும்.