ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு: ‘47 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை…’

Read Time:2 Minute, 7 Second

கர்நாடகாவில் ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் வளர்த்த 47 ஆடுகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தும்கூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியை சேர்ந்த விவசாயி ஒருவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வந்தார். அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் சளி காய்ச்சல் மற்றும் சுவாசக்கோளாறு இருந்து உள்ளது. இதையடுத்து அவரை பரிசோதித்த போது கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் வளர்த்த 47 ஆடுகளில் சிலவற்றுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக மாவட்ட கால்நடைத்துறை குழுவினர் சிக்கநாயக்கனஹள்ளிக்கு விரைந்து சென்று 47 ஆடுகளையும் தனிமைப்படுத்தி சோதனையை மேற்கொண்டனர். முகக் கவசம், கொரோனா பரவாமல் தடுக்கும் உடை உள்ளிட்டவை அணிந்து ஆடுகளுக்கு கொரோனா தாக்கியுள்ளதா என்பதை கண்டறிய அவற்றின் சளி, ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளை எடுத்தனர். இதனை பெங்களூருவில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்துக்கும், போபாலில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் உயிரியல் தொழில்நுட்ப மையத்துக்கும் அனுப்பி இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு வைரஸ் சென்றதாக எந்தஒரு ஆய்வு முடிவுகளும் இல்லை. இருப்பினும், ஆடுகளிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை போபாலில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பியிருக்கிறோம் என அம்மாநில மருத்துவ குழுவினர் தெரிவித்து உள்ளனர்.