லடாக் எல்லையில் சீனா அடாவடி… ரஷியாவிடம் இருந்து போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா…

Read Time:2 Minute, 30 Second

லடாக் எல்லையில் சீன ராணுவம் அடாவடியில் ஈடுபட்டதை தொடர்ந்து எல்லையில் மோதல் போக்கு காணப்படுகிறது.

இந்திய ராணுவம் சீனாவின் அடாவடியை அடக்கி பதிலடியை கொடுக்கும் வகையில் படையின் எண்ணிக்கையை அதிகரித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் இந்திய விமானப்படைக்கு கூடுதலாக 33 போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்தியப் படைகளுக்கு தடவாளங்களை வாங்குவது தொடர்பான கவுன்சில் கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விமானங்கள் வாங்குவது தொடர்பான முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது.

கூட்டத்தில் புதிய விமானங்களை வாங்குவதற்கான இரண்டு திட்டங்களும், மிக் 21 விமானங்களை மேம்படுத்துவதற்கான மூன்றாவது திட்டமும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளன. ரூ .38,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்திய விமானப்படையில் தற்போதுள்ள மிக் -29 விமானங்களை மேம்படுத்தும் திட்டத்துடன், புதியதாக 21 மிக் -29எஸ் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. மேலும், 12 Su-30 MKI விமானங்களை வாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவிலிருந்து மிக் -29எஸ் விமானங்க்ள் கொள்முதல் மற்றும் மேம்படுத்தலுக்கு ரூ .7418 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்திடம் இருந்து ரூ .10,730 கோடி செலவில் Su-30 MKI விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் நமது எல்லைகளை பாதுகாப்பதற்காக ஆயுதப்படைகளை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தில் இந்நடவடிக்கை விரைந்து எடுக்கட்டுப்பட்டு இருக்கிறது.