இந்தியா நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு தடை…

Read Time:2 Minute, 51 Second

லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை தொடர்ந்து, இந்தியாவில் 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி, இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை இனி இந்தியா அனுமதிக்காது. சீன நிறுவனங்கள் பங்குதாரராக செயல்படும் கூட்டு முயற்சிகளுக்கும் அனுமதி கிடையாது. நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்.

தற்போதைய மற்றும் புதிய டெண்டர்களிலும் இந்த புதிய முடிவு அமல்படுத்தப்படும். தற்போதைய டெண்டர்களில் சீன நிறுவனங்கள் கண்டறியப்பட்டால், மறு டெண்டர்கள் விட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்திய நிறுவனங்கள் நெடுஞ்சாலை திட்டங்களில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் தகுதிக்கான விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்படும். சிறிய சாலை திட்டங்களில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்க தகுதி பெற்றால், பெரிய திட்டங்களிலும் பங்கேற்க தகுதி பெறும்.

திட்டங்களை கைப்பற்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் கைகோர்க்க தேவை இல்லாத வகையில் விதிமுறைகள் மாற்றப்படும். தொழில்நுட்பம், ஆலோசனை, வடிவமைப்பு போன்றவற்றில் வெளிநாட்டு நிறுவனங்களின் கூட்டு தேவைப்பட்டாலும், சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.

சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை பொறுத்தவரையில் உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிக்க முயற்சி நடந்து வருகிறது. அதே சமயத்தில், வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்போம். ஆனால், சீன முதலீட்டாளர்களுக்கு அனுமதிக்க மாட்டோம். சீனாவில் இருந்து இந்திய துறைமுகங்களுக்கு வரும் பொருட்களை தன்னிச்சையாக தடுக்க மாட்டோம். அதே சமயம், சீன இறக்குமதியை ஊக்குவிக்க மாட்டோம். தற்சார்பு இந்தியாவை அடைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனக் கூறியிருக்கிறார்.