மணமான மறுநாளே உயிரிழந்த மாப்பிள்ளை…! திருமணத்தில் பங்கேற்ற 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

Read Time:2 Minute, 52 Second

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், பொதுமக்கள் கூட்டமாக் கூடுவதை நிறுத்திக்கொள்வதாக தெரியவில்லை. திருமண கூட்டங்களில் அதிகமான மக்கள் கலந்துக்கொள்ளும் சூழ்நிலையே இருக்கிறது.

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் திருமணமான மறுநாளே மாப்பிள்ளை உயிரிழந்து உள்ளார். அவரது திருமண விழாவில் பங்கேற்ற 111 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லியை அடுத்த குருகிராமில் பொறியாளராக பணியாற்றி வந்த மணமகன், திருமணத்துக்காக அங்கிருந்து வந்து இருக்கிறார்.

அப்போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்தின் போது அவரது நிலை மிகவும் மோசமாக இருந்து உள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறியான வயிற்றுப்போக்கு ஏற்பட்ட அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். பின்னர் அவருக்கு மருந்து கொடுத்த குடும்பத்தினர், வலுக்கட்டாயமாக திருமணச் சடங்குகளில் ஈடுபடுத்தி இருக்கின்றனர். இதனையடுத்து திருமணமான அடுத்த நாளே மாப்பிள்ளை உயிரிழந்து உள்ளார்.

இதுகுறித்து பாட்னா மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்து இருக்கிறது. இதுதொடர்பாக விசாரிக்க அதிகாரிகள் வருவதற்கு முன்பே, உயிரிழந்த மாப்பிள்ளையின் உறவினர்கள் உடலை அடக்கம் செய்துள்ளனர். இதனால் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால், மாப்பிள்ளையின் உறவினர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது. உடனடியாக பரிசோதனை மேற்கொண்டதில், இதில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த திருமணத்தில் பங்கேற்ற சுமார் 350 பேரை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தி அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது. இதனிடையே, 50 பேருக்குமேல் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்ற விதியை மீறியது குறித்து விசாரிக்க ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார்.