கொரோனா தடுப்புக்கு பருத்தி துணியில் வீட்டில் தயாரிக்கும் முக கவசம் நல்லது… விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Read Time:2 Minute, 28 Second

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றை தடுத்து நிறுத்துவதற்கு மூன்றே வழிகள்தான் மனித குலம் முன்னதாக இருக்கின்றன. ஒன்று, முக கவசம், இரண்டு, தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், மூன்றாவது, கைகளை சுத்தமாக வைத்திருத்தல். இப்போது முகக்கவசம் அணிவதில் ஓரளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால், எல்லோராலும் அதிக விலை கொடுத்து முக கவசம் வாங்குவதில் பொருளாதார ரீதியில் சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இந்திய அரசு முதலிலே பருத்தியால் ஆன துணியால் முகக்கவசங்களை தயாரித்து அணிந்துக்கொள்ளலாம் எனக் கேட்டுக்கொண்டது. இதற்கிடையே முகக்கவசம் என்ற பெயரில் பல துணிகளும் விற்பனைக்கும் வந்து இருக்கிறது. இவற்றில் பலவை முகத்தை அறுக்கும் வகையில், அறிப்பு ஏற்படுத்தும் வகையிலும் இருக்கிறது.

இதற்கிடையே எத்தகைய முக கவசம் கொரோனா வைரசிடம் இருந்து நம்மை காப்பதற்கு உதவும் என்பது பற்றி அமெரிக்காவில் புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து உள்ளனர். மருத்துவ ரீதியில் அல்லாத முக கவசங்களை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள். இதில் 2 அடுக்கு மெல்லிய பருத்தி துணிகளை கொண்டு தயாரிக்கப்பட்டு, நன்கு பொருந்துகிற முகக்கவசங்கள் மட்டுமே கொரோனா வைரஸ் தடுப்பில் மிகுந்த பயனுள்ளவையாக இருக்கும் என்பதும் தெரிய வந்து இருக்கிறது.

இவ்வகை முக கவசங்கள்தான், இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படுகிற நீர்த்திவலைகளின் பரவலை தடுத்து நிறுத்துகிறது. அதே சமயம், பந்தனா பாணி (கைக்குட்டையை மடித்து முகத்தில் கட்டிக்கொள்வது) உறைகள் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை என்பதே கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் பிசிக்ஸ் ஆப் புளூய்ட்ஸ் (திரவ இயற்பியல்) பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது.