உலக நாடுகளை கதிகலங்க செய்யும் கொரோனாவை தடுப்பதற்கு 141 தடுப்பூசிகள்… விஞ்ஞானிகள் தீவிரம்…

Read Time:2 Minute, 55 Second

எங்கே போகிறது கொரோனாவின் பாதை என்று உலகளாவிய விஞ்ஞானிகளாலேயே கணித்துச்சொல்ல முடியவில்லை.

ஒவ்வொரு நாளும் கொரோனாவின் ஆட்டம் உலக நாடுகளையெல்லாம் கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. கொரோனாவின் பாதை எங்கு செல்கிறது உலகளாவிய விஞ்ஞானிகளாலேயே கணித்து சொல்ல முடியாத நிலையே தொடர்கிறது. எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் முன் கைக்கட்டி நிற்கிறது.

இப்போதைக்கு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நம்பகமான தடுப்பூசிதான் தேவையாக இருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ரஷியா, இஸ்ரேல் என உலக நாடுகள் பலவற்றிலும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு நிலை பரிசோதனையில் இருக்கிறது. பக்கவிளைவையும் கவனம் கொள்ள வேண்டும் என்பதால் மருந்தை கண்டுபிடிப்பதில் சவால்கள் ஆயிரம் நிறைந்திருக்கிறது.

உலகமெங்கும் 141 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் மருத்துவ விஞ்ஞானிகள் இரவு பகலாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகைக்கு அளித்து உள்ள பேட்டியில், “கொரோனா வைரஸ் மரபணு வரிசை வெளியிடப்பட்டதில் இருந்து தடுப்பூசி மருந்து உருவாக்கும் பணி தொடங்கி விட்டது.

141 தடுப்பூசிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. முன்னணி தடுப்பூசிகள் வெற்றி பெற இன்னும் சில மாதங்களே ஆகலாம். நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என கூறியிருக்கிறார்.

பல மருந்துகள் மனித பரிசோதனைக்கு வந்துவிட்டது. சில தடுப்பூசி மருந்து செலுத்திக்கொண்டவர்கள் யாருக்கும் எந்தவொரு தீவிர பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்து உள்ளது. முதலில் எந்த மருந்து சந்தைக்கு வரும் என்பதில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. எந்தளவுக்கு விரைவாக நம்பகமான தடுப்பூசியை கொண்டு வர முடியுமோ, அந்தளவுக்கு விரைவாக கொண்டு வர வேண்டும், அப்போதுதான் கொலைகார கொரோனாவிடம் இருந்து மனிதகுலம் காக்க வழிபிறக்கும்.