‘எல்லையை விரிவாக்கம் செய்யும் காலமெல்லாம் முடிந்துவிட்டது…’ லடாக்கில் சீனாவிற்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

Read Time:3 Minute, 1 Second

லடாக் எல்லையில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா- சீனா ராணுவம் இடையே கடுமையான மோதல் நடந்தது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்து உள்ளது. எல்லையில் படைகளை வாபஸ் வாங்குவது மற்றும் அமைதியை நிலை நாட்டுவது தொடர்பாக இருநாட்டு ராணுவம் தரப்பில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதற்கிடையே எல்லையில் சீனாவின் எந்தஒரு தாக்குதலையும் சந்திக்கும் வகையில் இந்திய படைகள் குவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று திடீரென லடாக் பகுதிக்கு சென்று உள்ளார். அங்கு இந்திய ராணுவ வீரர்களிடம் உரையாற்றினார். மோதல் சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலியை செலுத்தினார்.

கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் நிமு பகுதியில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் ஆலோசனையை நடத்தினார்.

அப்போது பிரதமர் மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசுகையில், “‘நாட்டின் எல்லையை விரிவாக்கம் செய்யும் காலமெல்லாம் முடிந்துவிட்டது…’ இப்போது வளர்ச்சிக்கான காலமாகும். எல்லையை விரிவாக்கம் செய்ய முயற்சி செய்யும் நாடுகள் அனைத்தும் தோல்வியை தழுவிட்டன அல்லது பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன என்பதை வரலாறு காண்பிக்கிறது,” என சீனாவிற்கு வலுவான ஒரு செய்தியை வழங்கியிருக்கிறார்.

“நீங்களும் உங்கள் தோழர்களும் காட்டிய துணிச்சல், இந்தியாவின் வலிமை குறித்து ஒரு செய்தியை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றுவிட்டது… உங்கள் தைரியம் இன்று நீங்கள் இருக்கும் இடங்களைவிடவும் (மலைப்பகுதிகள்) உயர்ந்தது.”

தற்சார்பு இந்தியா என்ற தீர்மானம் உங்களாலும் (ராணுவ வீரர்கள்) , உங்களுடைய வலுவான தீர்மானத்தாலும் வலுவடைந்து இருக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நாட்டின் நிலப்பரப்பை அதிகரிக்க பேராசையுடன் செயல்பட்டோர் எப்போதும் வீழ்ச்சிதான் அடைந்து உள்ளனர். நாம் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர்கள் தான்; அதே வேளையின்றி சுதர்சன சக்கரத்தையும் வைத்திருக்கிறோம் என பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.