இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் அல்-பதார் பயங்கரவாதிகளை சீனா நாடியது…!

Read Time:2 Minute, 15 Second

லடாக் எல்லையில் அத்துமீற முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் உருவான பதற்றம் இன்னும் தணியவில்லை. இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எல்லையில் ஆக்கிரமிப்பு மனப்போக்குடன் நடந்து கொள்ளும் சீனா, மற்றொரு புறம் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தூண்டுவிடும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் ஜில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியானது இந்திய யூனியன் பிரதேசமான லடாக்கின் வடகோடியில் அமைந்து இருக்கிறது.

லடாக்கில் இந்திய- சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஜில்ஜித்-பல்டிஸ்தான் எல்லையில் 20 ஆயிரம் ராணுவ வீரர்களை நகர்த்தி வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த அல்-பதார் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீன அதிகாரிகளை சந்தித்து பேசியதாகவும், அப்போது அந்த இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக சீன அதிகாரிகள் உறுதி அளித்ததாக தெரியவந்து இருக்கிறது என இந்திய புலனாய்வு துறை வட்டாரங்கள் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

சீனாவுடன் கைகோர்க்கும் அல் பதார் இயக்கம் கடந்த காலங்களில் காஷ்மீரிலும், ஆப்கானிஸ்தானிலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி இருக்கிறது.

இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக அந்த இயக்கத்துக்கு இப்போது சீனா ஆதரவு அளிக்க முன்வந்து இருப்பது தெரியவந்து இருக்கிறது.