கோவையில் ஊரடங்கு காலத்தில் 12 யானைகள் சாவு… இரை தேடிவந்த யானையின் மண்டையை துளைத்த மூளைக்குள் பாய்ந்த.. துப்பாக்கி குண்டு..!

Read Time:5 Minute, 56 Second

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஐடிசி பம்ப் ஹவுஸ் பகுதியில் விவசாய தோட்டத்தில் பெண் யானையொன்று இறந்து கிடப்பது வனத்துறைக்கு நேற்று (ஜூலை 2) தெரியவந்தது.

இறந்து கிடத்த யானையின் காதோரம் இரத்தம் உரைந்து காணப்பட்டு உள்ளது. யானையை பிரதேச பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அதனுடைய காது பகுதியில் ஈயத் துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்து அதனுடைய மண்டைக்குள் புகுந்து மூளைக்குள் சென்று பெரும் துயரத்தை ஏற்படுத்தி யானையை கொன்றிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

யானை இவ்வாறு இறந்த இச்சம்பவம் வன உயிரின ஆர்வலர்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இரை தேடிவந்த பெண் யானையை சிலர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதற்கு வனத்துறையினரின் அலட்சியம் தான் காரணம் என்று விமர்சனம் எழுந்திருக்கிறது.

யானை சுடப்பட்டு உள்ளது என்பது தெரிய வந்ததும் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனையை மேற்கொண்டு உள்ளனர். அப்போது, ஓடைப்பகுதியில் துப்பாக்கியொன்றை கண்டுபிடித்து உள்ளனர். இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், யானையை சுட்டுக் கொன்றதாக தேக்கம்பட்டியை சேர்ந்த ராமசாமி, கிருஷ்ணசாமி ஆகியோரை கைது செய்து உள்ளனர். இதுதொடர்பான விசாரணையில் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது அப்பகுதியில் விவசாய நிலங்களுக்குள் வரும் யானைகளை மெல்ல சாகும் வகையிலான குண்டுகளை பயன்படுத்தி விவசாயிகள் என்ற போர்வையில் பலர் கொடூரமான கொலைகளை அரங்கேற்றியுள்ளனர் என்பது தெரியவந்து இருக்கிறது.

இப்படிப்பட்ட துப்பாக்கிகளும், ஈயத் தோட்டாக்களும் இங்குள்ள விவசாயிகளிடம் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அவர்கள் தங்கள் தோட்டங்காட்டுக்குள் நுழையும் காட்டு யானை கூட்டத்தை இந்த துப்பாக்கியை பயன்படுத்தியே விரட்டுகிறார்கள். அதில், காயமடையும் யானைகள் காயம் அழுகி சீழால் சிதைந்து ஒரு கட்டத்தில் மரணம் என்ற நிலைக்கு செல்கிறது. இப்படி பாதிக்கப்படும் யானைகள் அடர் வனத்திற்கு சென்று உயிரை விடுவதால் ஓரிரு வாரங்கள், சில சமயம் மாதக்கணக்கில் ஆன பின்புதான் வனத்துறைக்கே தகவல் தெரியவருகிறது.

இதனால் யானைகளின் மரணம் எதனால் ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாத அவலநிலை ஏற்படுகிறது.

இதற்கிடையே சாகும் யானைகளை பிரேத பரிசோதனை செய்யும் வனத்துறை மருத்துவர்களும், ‘தீவனம் இல்லை. வயிற்றில் புண்’ என்று சொல்லி விஷயத்தை ஊற்றி மூடிவிடுகிறார்கள் என்ற விமர்சனம் மற்றும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. அப்பகுதியில் இருக்கும் யானைகள் பெரும்பாலும் எழும்பும் தோலுமாகவே காட்சியளிப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே காடுகளில் யானைகளுக்கான நீராதாரத்தையும் தீவனத்தையும் ஏற்படுத்தும் பொறுப்பும் வனத் துறையினர் கையிலேயே இருக்கிறது. முன்பெல்லாம் வேனிற்காலத்தில் காடுகளில் வனவிலங்குகளுக்கு உப்புக் கட்டிகள் வைப்பது, நீர்நிலைகள் அமைப்பது, நீர்த்தொட்டிகளை நிரப்புவது போன்ற பணிகளை இடையறாது செய்து வந்தார்கள். இப்போது கொரோனா காலத்தில் அவர்கள் அப்படி செய்கிற மாதிரியே தெரிவதில்லை. தோட்டங்காடுகளை கண்காணிப்பது போலவும் தகவல் இல்லை என ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த மூன்று மாத காலத்தில் மட்டுமே கோவை வனக்கோட்டத்தில் மட்டும் 12 யானைகள் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றின் இறப்புகளுக்கு ‘தீவனம் இல்லை. உடல்நலக்குறைவு’ என்றே காரணம் சொல்லப்பட்டு இருக்கிறது. காடுகளில் வன உயிரினங்களுக்கு தேவையான இரை கிடைக்கவும் வனத்துறை தரப்பில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது.

சமீபத்தில் கேரள மாநிலத்தில் அன்னாசிப்பழத்தில் வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் காயமடைந்து கர்ப்பிணி யானை ஒன்று மரணமடைந்த சம்பவம் உலக மக்கள் அனைவரையும் உலுக்கியது. எனினும், யானைகள் கொடூரமாக கொல்லப்படும் அவலம் தொடரவே செய்கிறது. இப்போது தமிழகத்திலும் இதே நிலைதான் தொடர்கிறது என்பதை கோவை சம்பவம் கோடிட்டு காட்டுகிற்து. மேட்டுப்பாளையத்தில் துப்பாக்கி குண்டுக்கு பலியான பெண் யானையின் மரணம் பெரும் துயரமாகியிருக்கிறது. யானைகளின் இந்த துயரம் என்று தான் ஓயுமோ என்ற கண்ணீருடனான கேள்வியே தொடர்கிறது.