இந்தியாவில் 109 வழித்தடங்களில் 151 நவீன ரெயில்களை தனியார் மூலம் இயக்கும் திட்டத்தை தொடங்க இருக்கிறது. அதற்கான விண்ணப்பங்களை வரவேற்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ரெயில்வே போர்டு வாரிய தலைவர் வி.கே.யாதவ் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசினார்.
அவர் பேசுகையில், இந்தியாவில் வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் 151 ரெயில்களை தனியார் மூலம் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்திய ரெயில்வே இயக்கும் 2,800 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 5 சதவீத ரெயில்கள் தனியார் மூலம் இயக்கப்படும். மீதமிருக்கும் 95 சதவீத ரெயில்களை இந்திய ரெயில்வே இயக்கும். இதில் தனியார் நிறுவனங்களின் முதலீடு ரூ.30 ஆயிரம் கோடியாக இருக்கும். இதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்க இருக்கின்றன என தெரிவித்தார்.
மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, செகந்திராத், ஜெய்ப்பூர், ஹவுரா, பாட்னா, பிரயாக்ராஜ் சண்டிகார் உள்ளிட்ட 12 பிராந்தியங்களில் இந்த தனியார் ரெயில்கள் இயக்கப்படும். சென்னை பிராந்தியத்தில் மட்டும் 16 ரெயில்கள் இயக்கப்படும் என தெரிகிறது.
ஒவ்வொரு தனியார் ரெயிலிலும் குறைந்தபட்சம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த பெட்டிகள் நவீன தொழில்நுட்பம் கொண்டதாகவும், அதிவேகமாக செல்லும் வகையிலும் இருக்கும். இந்த ரெயில்களில் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்த ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். ரெயில் போக்குவரத்தை நடத்தும் தனியார் நிறுவனங்கள் இந்த ரெயில் பெட்டிகளையே வாங்க வேண்டும். பெட்டிகள் பராமரிப்பையும் அவர்களே மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனியார் ரெயில்களின் கட்டணம் மற்றும் உணவு, வைபை வசதி உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என்ற வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே, கட்டணம் விமான கட்டணத்துடன் போட்டியிடக்கூடியதாக இருக்கும். விமானம், பஸ் கட்டணம் ஆகியவற்றை மனதில் கொண்டு இந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.
இதற்கான டிக்கெட்டுகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமும் விற்பனை செய்யப்படும். ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட ரெயில்வே கட்டமைப்புகளையும், மின்சாரத்தையும் பயன்படுத்துவற்காக தனியார் ரெயில்களை இயக்குவோர் அரசாங்கத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும். தனியார் ரெயில்கள் 95 சதவீதம் சரியான நேரத்துக்கு புறப்படுவது, சென்றடைவது உறுதி செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி தனியார் ரெயில்களின் செயல்பாடுகள் அமையவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.
தனியார் ரெயில்கள் இயக்கப்படும் போது போதிய சேவைகள் கிடைக்கும் என்பதால் பயணிகள் காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டிய நிலை குறைந்துவிடும் என .வி.கே.யாதவ் தெரிவித்து உள்ளார்.
ரெயில்கள் தனியார் வசம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புக்கள் எழுந்து இருக்கிறது. தனியார் ரயில்களை இயக்குவதால் ரெயில் கட்டணம் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ரெயில்வே துறையில் தனியார் ரயில்களை இயக்குவதால், பயணிகளின் பாதுகாப்பு என்பதற்கு அச்சுறுத்தல் இருக்கிறது. மேலும், ரெயில் கட்டணங்கள் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ரெயில்வே பொதுத்துறை நிறுவனத்தில் தனியார் ரெயில்களை இயக்க திட்டமிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. ரெயில்வே இந்த முடிவை கைவிடாவிட்டால் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம் என தெட்சிணரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.