தமிழக-கேரள எல்லையில் சாலையின் தடுப்புச்சுவரை தாண்ட ‘குட்டி’க்கு தாய் யானை பயிற்சி அளிக்கும் நெகிழ்ச்சி காட்சி வீடியோ:-

Read Time:3 Minute, 9 Second

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக பாலக்காட்டுக்கு மலைப்பாதை செல்கிறது.

இந்த மலைப்பாதையில் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இப்போது தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பெரும்பாலும் மலைப்பாதை வெறிச்சோடி காணப்படுவதால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஜூலை 2-ம் தேதி காலை 8 மணியளவில் கீழ்நாடுகாணி அருகே தேன்பாறா என்ற இடத்தில் சரக்கு லாரிகள் சென்று கொண்டு இருந்தன. அப்போது பிறந்து 2 மாதங்களே ஆன குட்டியானையுடன் 2 காட்டுயானைகள் மலைப்பாதையை கடந்து உள்ளன. உடனே சரக்கு லாரிகளை டிரைவர்கள் ஆங்காங்கே நிறுத்தி உள்ளனர்.

இதற்கிடையில் சாலையோர தடுப்புச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் குட்டியானை தவித்திருக்கிறது. இதை கண்ட தாய் யானை, தடுப்புச்சுவரை தாண்டி செல்வது எப்படி? என்று செயல் விளக்கம் மூலம் பயிற்சி அளித்து இருக்கிறது. இதை கவனித்த குட்டியானை, முன்னங்கால்களை தடுப்புச்சுவரில் தூக்கி வைத்து, ஏற முயன்றது. ஆனால் முடியவில்லை.

உடனே தடுப்புச்சுவரின் மீது தாய் யானை ஏறி நின்றது. இதை பார்த்து குட்டியானையும் முன்னங்கால்களை தடுப்புச்சுவர் மீது தூக்கி வைத்து, பின்னங்கால்களை தூக்கி மீண்டும் ஏற முயற்சியை மேற்கொண்டது. எனினும் ஏற முடியாமல் தவித்தது. உடனே தாய் யானை துதிக்கையால் குட்டியானையை தூக்கிவிட்டு தடுப்புச்சுவரை தாண்டி செல்ல உதவியது. தொடர்ந்து குட்டியுடன் 2 காட்டுயானைகளும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.

இந்த நெகிழ்ச்சி காட்சியை தங்களது செல்போனில் வீடியோ எடுத்த லாரி டிரைவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர். தற்போது அந்த வீடியோ இந்தியா முழுவதும் வைரலாக பரவி வருகிறது. காட்டுயானைகள் மலைப்பாதையை கடந்த சென்றதும், டிரைவர்கள் தங்களது லாரிகளை இயக்கி சென்று உள்ளனர்.

யானையின் செயலை பலரும் பாராட்டி நெகிழ்ந்து வருகின்றனர். “அம்மா அம்மா தான்,” என பலரும் தாய்மையை போற்றியுள்ளனர். இதற்கிடையே வனவிலங்குகளின் பாதையை தடுக்கும் வகையில் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களை முன்னெடுப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.