இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு என தகவல்

Read Time:2 Minute, 48 Second

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உள்ளது.

இதில் முக்கியமான நிறுவனமாக டிக் டாக்கின் செயலியும் தடையில் சிக்கியிருக்கிறது. உலகம் முழுவதும் டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்தவர்களில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் ஆவர். செயலியை பயன்படுத்துபவர்கள் மற்றும் அதனால் கிடைக்கும் வருவாயும் இந்தியாவில் தான் அதிகமாகும். டிக்டாக் நிறுவனத்திற்கு இந்தியா தான் மிகப்பெரிய மார்க்கெட்டாக இருக்கிறது. அமெரிக்கா, சீனாவில் கூட அவ்வளவு பயன்பாடு கிடையாது.

சீன தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக திகழும் ‘யுனிகார்ன் பைட்டான்ஸ் லிமிடெட்’ நடத்தும் டிக் டாக், ஹலோ, விகோ வீடியோ ஆகிய 3 செயலிகளும் தடையில் சிக்கியிருக்கிறது.

இந்த 3 செயலிகளுக்கு தடை விதித்த இந்தியாவின் முடிவால், தங்களுக்கு 6 பில்லியன் டாலர் (ரூ.45 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என்று யுனிகார்ன் நிறுவனம் கணித்திருக்கிறது. இந்த நஷ்டம், மற்ற 56 செயலிகளுக்கு ஏற்படும் மொத்த இழப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் டிக் டாக் செயலி தடையென்பது அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும் என சீன மீடியவும் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதற்கிடியே இந்திய அரசின் தடை உத்தரவுக்கு கட்டுப்படுவதாக அறிவித்து இருக்கிறது டிக் டாக் நிறுவனம்.

இந்திய சட்டங்களின் கீழ், பயனர்களின் அந்தரங்க தகவல்களுக்கும், பாதுகாப்புக்கும் ‘டிக் டாக்‘ முக்கியத்துவம் அளிக்கிறது. பயனர்களின் தகவல்களை சீன அரசு உள்பட எந்த அரசிடமும் பகிர்ந்து கொண்டது கிடையாது. எதிர்காலத்தில் கேட்டாலும், பகிரப்போவது கிடையாது. பயனர்களின் அந்தரங்கத்துக்கும், கண்ணியத்துக்கும் ‘டிக் டாக்‘ உயர் முக்கியத்துவம் அளிக்கும் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே டிக் டாக் நிறுவனத்தினால் இந்தியாவில் பணியமர்த்தப்பட்ட 2000 பேரின் நிலைமை என்னவென்றும் தெரியவில்லை.