கொரோனா தடுப்பு மருந்து ‘அவசரம் காட்டக்கூடாது’ – இந்திய அகாடெமி ஆஃப் சயின்ஸ்

Read Time:4 Minute, 50 Second

உலக நாடுகளில், அதுவும் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா, பிரேசில் போன்ற வளர்ந்த நாடுகளைக்காட்டிலும் இந்தியா தான் தடுப்பூசி துறையில் எப்போதும் முன்னிலை வகிக்கிறது என்பது கொரோனாவிலும் நிரூபணம் ஆகப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவிலே நம்பகமான ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு உள்ளது.

‘கோவேக்சின்’ என்று அழைக்கப்படுகிற இந்த தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கூட்டாக உருவாக்கி இருக்கிறது. இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்திய சோதனை வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த சோதனையில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி பாதுகாப்பானது, நம்பகமானது, சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் வல்லமை கொண்டது என நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிப்பதற்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி (டிஜிஜிஐ) அனுமதியை அளித்து உள்ளார். இதில், அடுத்த கட்ட நடவடிக்கையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இறங்கி இருக்கிறது.

சுதந்திர தினம் முதல் பொதுமக்களுக்கு போட அதிவேக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் முதல் கட்ட பரிசோதனைக்கும் ஏற்பாடு ஆகிறது. ஆகஸ்டு 15-ம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து மட்டுமல்ல, கொலைகார கொரோனா வைரசிடமிருதும் விடுதலை பெறுகிற ஒரு நாளாக மாறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. இந்த நம்பிக்கையை நமக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அறிமுகப்படுத்தும் ஐசிஎம்ஆர் முயற்சி சாத்தியமற்றது, நடைமுறைக்கு வராத ஒன்று என்று தி இந்தியன் அகாடமி ஆஃப் சயின்ஸ் அமைப்பு (ஐஏஎஸ்சி) கருத்து தெரிவித்து உள்ளது.

பெங்களூரில் செயல்படும் இந்த அமைப்பு பல்வேறு அறிவியல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிம்ஆர் அமைப்பு கொரோனா தடுப்பு மருந்தை விரைவுபடுத்துவதற்கு பல்வேறு அறிவியல் வல்லுநர்கள், மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கொரோனா தடுப்பு மருந்து 2021-ம் ஆண்டுக்கு முன்பாக தயாராக சாத்தியமில்லை என்று அரசு தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் அறிவியல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி உறுப்பினர்களை கொண்டிருக்கும் இந்திய அகாடமி ஆஃப் சயின்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முறைப்படி கிளினிக்கல் பரிசோதனையை படிப்படியாக கடந்துதான் வர வேண்டும். மருந்து கண்டுபிடித்தலுக்கு நிர்வாக ரீதியான ஒப்புதல்களை விரைவுபடுத்தலாம். ஆனால், அறிவியல் ரீதியிலான பரிசோதனைகள், விவரங்களை சேகரித்தல் போன்றவை இயல்பான, இயற்கையான நேரத்தில்தான் சேகரிக்க முடியும். இதை அவசரகதியில் நமது தேவைக்கு ஏற்ப, அறிவியலின் கடுமையான தரத்தை சமரசம் செய்துகொள்ள முடியாது என தெரிவித்து உள்ளது.

கடுமையான விஞ்ஞான செயல்முறைகள் மற்றும் தரத்தில் சமரசம் செய்துகொண்டு எடுக்கக்கூடிய எந்தவொரு அவசர முடிவும், மக்கள் மீது எதிர்பாராத அளவில் நீண்டகால பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கவும் செய்திருக்கிறது.