கொரோனா வைரசை தொடர்ந்து சீனாவை மிரட்டும் ‘பிளேக்’…

Read Time:2 Minute, 21 Second

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது.

இந்த வைரசின் முதல் அலையில் இருந்து மீண்ட சீனா தற்போது இரண்டாம் அலைக்கு இரையாகி வருகிறது. இந்த நோயில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது என்ற செய்தி வெளியகியிருக்கிறது.

சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். பிளேக் நோய் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

மக்கள் அனைவரும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உஷார் நிலை இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு கடந்த 1-ம் தேதி பிளேக் நோய் உறுதி செய்யப்பட்டது.

மர்மோட் எனப்படும் ஒருவகை அணிலின் இறைச்சியை தின்றதால் இவர்கள் பிளேக் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். சீனாவில் பிளேக் நோய் கண்டறியப்பட்டு இருப்பது அரசையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. சீனாவில் சமீபத்தில் பன்றியில் இருந்து பரவக்கூடிய ஜி4 வைரஸ் கண்டறியப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.