‘டிக் டாக் பைத்தியங்களை குறிவைக்கும் ஸ்கேமர்கள்…’ சிக்காதீர்கள்…!

Read Time:2 Minute, 47 Second

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உள்ளது.

இதில் முக்கியமான நிறுவனமாக டிக் டாக்கின் செயலியும் தடையில் சிக்கியிருக்கிறது.

இச்செயலில் முழு தீவிரமாக செயல்பட்டவர்களுக்கு பெரும் இழப்பாக இந்த அறிவிப்பு உள்ளது. கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் பலரும் பொழுதுபோக்கிற்காக இச்செயலியில் மயங்கியிருந்தனர். இப்போது தடையென்றதும் மாற்று செயலியை தேடிச் செல்கிறார்கள். சில செயலிகளை அடையாளம் கண்டாலும் அவை டிக் டாக் போன்று இல்லையென்பது அவர்களுடைய கதறலாக இருக்கிறது.

எனவே, அவர்களுடைய டிக்டாக் செயலி தேடலானது தொடர்ந்து நடக்கிறது.

இப்போது டிக்டாக்கில் பைத்தியமாக இருப்பவர்களை குறிவைக்கும் கும்பல் ஒன்று புறப்பட்டு இருக்கிறது. எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் வழியாக தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளனர். ஸ்கேமர்கள் (மோசடியாளார்கள்) இந்தியாவில் டிக் டாக்கின் புதிய பதிப்பான டிக் டாக் புரோவை பதிவிறக்குவதற்கு லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று குறுஞ்செய்தி அனுப்பி பயனர்களை ஏமாற்றுகிறார்கள்.

அவர்கள் அனுப்பும் லிங்கிற்கு சென்று செயலியை தரவிறக்கம் செய்தால் டிக் டாக் போன்றே இருப்பது தெரியவந்து உள்ளது. அதில் கேமரா மற்றும் மைக் அனுகலுக்கு மற்றும் பெர்மிஷன் கேட்கிறது. அதனை கொடுத்துவிட்டால் இச்செயலியானது இயங்காது. ஒரு செயலியாக மட்டும் இருக்கும். இதன்பின்னால் பெரும் மோசடியிருப்பது யாருக்கும் தெரியவரவில்லை. ஆனால், இது பெரிய மோசடியாக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த செயலியானது கூகுள் ப்ளேஸ்டோரில் கிடையாது. எனவே, ஆபத்தை தவிர்க்கும் வகையில் இந்த செயலியை தரவிறக்கம் செய்யாதீர்கள் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இதற்கு பின்னால் யார் உள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு நடக்கிறது. இதற்கிடையே சில பயனாளர்கள் தங்களுக்கு வந்த செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.