இந்தியாவின் தடுப்பு மருந்து: ‘கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் தொடக்கம்’ மத்திய அரசு கருத்து

Read Time:4 Minute, 45 Second

இந்தியாவில் கொரோனா வைரசை தடுக்க பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்சின்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்து உள்ளது.

இதேபோன்று ஜைடஸ் மருந்து நிறுவனம் மற்றொரு தடுப்பூசி மருந்தை உருவாக்கி உள்ளது.
‘ஜைகோவ்-டி’ என்று அழைக்கப்படுகிற இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்க்கப்பட்டு உள்ளது. அதில், நல்ல முடிவு கிடைத்துள்ளது. இதையடுத்து மனிதர்களுக்கு செலுத்தி பார்ப்பதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின், ஜைகோவ்-டி ஆகிய மருந்துகளின் பரிசோதனை என்பது கொரோனா வைரஸை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தொடக்கம் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவகத்தின் இணையதளத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன் என்பவரால் எழுதப்பட்டு உள்ள கட்டுரையில், உலகளவில் 140-க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகளின் தயாரிப்பு பல்வேறு கட்டங்களில் உள்ளன.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் ஏஇசட்டி1222(AZD1222) தடுப்பூசியை உருவாக்கியிருக்கிறது. இந்த நிறுவனம் பிரிட்டனின் கேம்பிரிட்ஜில் உள்ள அஸ்ட்ராஜெனெகா பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் பன்னாட்டு மருந்து மற்றும் உயிர் மருந்துத் தயாரிப்பு நிறுவனம் உரிமத்தை பெற்று இருக்கிறது. வாஷிங்டனின் கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் எம்ஆர்என்ஏ-1273(MRNA-1273) தடுப்பூசியை உருவாக்கியிருக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் இந்தியாவின் இரு உற்பத்தியாளர்களுடன் தடுப்பு்பூசி மருந்தை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்கெனவே செய்து உள்ளன.

கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து உலகில் எங்கு வேண்டுமானாலும் தயாரிக்கப்படலாம், ஆனால், இந்திய உற்பத்தியாளர்கள் தலையீடு இல்லாமல் தேவையான அளவு தயாரிப்பதில் சாத்தியமில்லை. மேலும், இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் தடுப்பூசிகளை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குழுக்களும் ஈடுபட்டு உள்ளன. புனேவில் உள்ள இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மற்றும் ஐதராபாத்தின் சிஎஸ்ஐஆர் நிறுவனமான போன்ற ஆறு இந்திய நிறுவனங்கள் கோவிட்-19க்கான தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருகின்றன.

இரண்டு இந்திய தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி ஆகியவற்றுடன் சேர்த்து உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட 140 தடுப்பூசிகளில் 11 தடுப்பூசிகள் மனித பரிசோதனைகளில் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோவாக்ஸின், ஜைகோவ்-டி ஆகிய மருந்துகள் கொரோனா வைரஸை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தொடக்கமாக பார்க்கப்படுகின்றன.

இந்த தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க முதல் இரு கட்ட பரிசோதனைக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், மூன்றாம்கட்ட பரிசோதனையும் நடத்தப்படுவது அவசியமாகும். தடூப்பூசி முழுமையாக தயாராக 15 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என்பதால், இந்தியாவில் தடுப்பூசில் எதுவும் 2021-ம் ஆண்டுக்கு முன் மக்கள் பயன்பாட்டிற்கு வரத் தயாராக இருக்க வாய்ப்பில்லை எனக் கூறியிருக்கிறார்.