அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்துக்கு பிறகு உலகமெங்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு எதிரான போராட்டங்கள் பிளாக் லைவ்ஸ் மேட்டர் #BlackLivesMatter என்ற பிரச்சாரத்தை உலகெங்கும் எழுப்பியிருக்கிறாது.
சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த ஹேஷ்டேக் நிறம் குறித்தும் அழகு குறித்தும் இதுவரை பொதுபுத்தியில் இருந்த கற்பிதங்களை உடைத்து வருகிறது.
இதற்கிடையே நிறத்தை அடிப்படையாக கொண்டு விளம்பரம் செய்யும் ‘ஃபேர் அண்டு லவ்லி’ பிராண்டுக்கு எதிர்ப்பு எழுந்தது. ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் ‘ஃபேர் அண்டு லவ்லி’ பிராண்டின் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக அறிவித்தது. இனி சருமத்தின் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம். ‘ஃபேர் அண்டு லவ்லி’ பெயரும் மாற்றப்படும் என்று ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் கூறியது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் தற்போது ‘க்ளோ அண்டு லவ்லி’ என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.

சினிமாவிலும் அழகு என்பதன் நேரடியான அர்த்தமாக சிகப்பு நிறம் தொடர்ந்து நிறுவப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தமன்னா இது குறித்த தன்னுடைய விளக்கத்தை வழங்கியிருக்கிறார். தமன்னா ஏற்கனவே பேர் அண்டு லவ்லி விளம்பத்தில் நடித்தவர் மற்றும் பால் அழகியென ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள்.
பிளாக் லைவ்ஸ் மேட்டர் பிரச்சாரத்தின் போது அழகு சாதன விளம்பரத்தில் நடித்ததற்காக அதிகம் விமர்சிக்கப்பட்ட நடிகைகளுள் தமன்னாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமன்னா பதில் அளிக்கையில், அழகிற்கான ஒரு அளவுகோலாக நிறம் நிச்சயமாக இல்லை. இது நிச்சயமாக அழகுக்கான அளவுகோல் கிடையது. பேர் அண்டு லவ்லி விளம்பரத்தில் நடித்ததன் மூலம் எனது வாழ்க்கையை தொடங்கினேன். ஆனால், அந்த நேரத்தில் நான் ஒரு மாடலாக இருந்தேன். வெறும் 15 வயது குழந்தையாக இருந்தேன். நான் அந்த அழகுசாதன பிராண்டை அங்கீகரிக்கவில்லை, ஆனால் நான் ஒரு மாடல், அவ்வளவு தான்.
தற்போது அந்த படங்களை எடுத்து தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் அதைப்பற்றி எப்படி நான் உணராமல் இருந்தேன் என்பதை காட்ட அவர்கள் முயற்சி செய்தார்கள். ஒரு பொது நபராகவும் பிரபலமாகவும் நான் ஒரு ‘பேர்னஸ்’ கிரீம்க்கு ஊக்கம் அளிக்கவில்லை. நான் திறந்த மனதுடன் உண்மையின் பக்கம் நிற்கவே விரும்புகிறேன். ரசிகர்களிடமிருந்து வரும் எல்லா அன்பும் அவர்கள் என்னை ‘மில்கி பியூட்டி’ என்று அழைப்பதும் ஒரு காரணம் என்று எனக்கு தெரியும்.

ஆனால், அது என்னுடன் இணைந்த ஒன்று கிடையாது. இதை பற்றி பேச இது மிக முக்கியமான நேரம். அழகுக்கும் நிறத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவரை சிகப்பானவர் என்று சொல்வது கூட ஒரு குறிப்பிட்ட வகையான இனவெறியே. நிறம் என்பது எதற்கும் அளவுகோள் அல்ல” எனக் கூறியிருக்கிறார்.