இந்தியாவை அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் டிக் டாக்கிற்கு தடை வருகிறது…! விபரம்:-

Read Time:2 Minute, 32 Second

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவின் டிக் டாக் உள்பட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உள்ளது.

டிக்டாக் நிறுவனத்திற்கு இந்தியா தான் மிகப்பெரிய மார்க்கெட்டாக இருக்கிறது. அமெரிக்கா, சீனாவில் கூட அவ்வளவு பயன்பாடு கிடையாது. சீன தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக திகழும் ‘யுனிகார்ன் பைட்டான்ஸ் லிமிடெட்’ நடத்தும் டிக் டாக், ஹலோ, விகோ வீடியோ ஆகிய 3 செயலிகளும் தடையில் சிக்கியிருக்கிறது.

இந்த 3 செயலிகளுக்கு தடை விதித்த இந்தியாவின் முடிவால், தங்களுக்கு 6 பில்லியன் டாலர் (ரூ.45 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என்று யுனிகார்ன் நிறுவனம் கணித்திருக்கிறது. இந்த நஷ்டம், மற்ற 56 செயலிகளுக்கு ஏற்படும் மொத்த இழப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டிக் டாக் நிறுவனத்திற்கு மற்றொரு மிகப்பெரிய அடியாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் அச்செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை தொடங்கியிருக்கிறது.

அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ பேசுகையில், டிக் டாக் உள்ளிட்ட சீன சமூக வலைதளங்களை தடை செய்வது தொடர்பாக ஆய்வு செய்கிறோம் எனக் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவிலும் டிக் டாக் மற்றும் பிற சீன சமூக ஊடக பயன்பாடுகளை தடை செய்யுமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்துடன் செயலியை பயன்படுத்துபவர்களின் தரவைப் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பகிர்ந்து கொள்கின்றன என்றா குற்றச்சாட்டு அங்கு முன் வைக்கப்பட்டு இருக்கிறது. சமூக வலைதளங்கள் என்ற போர்வையில் மற்ற நாடுகளில் உள்ள பயனர்களின் தரவுகளை சேகரிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சி இது என்று ஆஸ்திரேலிய நாட்டு எம்.பி. தெரிவித்து உள்ளார்.