‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நானா…? ரம்யா பாண்டியன் பதில்

Read Time:2 Minute, 52 Second

ரம்யா பாண்டியன் ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் நன்கு அறிமுகம் ஆனார்.

அப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து ‘ஆண் தேவதை’ எனும் படத்தில் நடித்தார். தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கும் படமொன்றிலும் நடித்து வருகிறார். சிறந்த நடிகையாக இருந்தாலும் அவர் நடித்த படத்தை விடவும் அவரை மிகவும் அடையாளப்படுத்தியது ஒரு போட்டோஷூட் தான்.

வீட்டு மொட்டை மாடியில் சேலையில் தன்னை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் மிகவும் வைரலானது. சேலையில் அவர் அழகாக இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு படத்தை மிகவும் வைரலாக்கினர். இதனையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்.

சமூக வலைதளத்தில் இவருடைய போட்டோ ஷூட்டுக்கு என்று பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியின் மூலம் இவர் மிகவும் பிரபலம் என்பதால், விரைவில் தொடங்கவுள்ள ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களில் ஒருவராக ரம்யா பாண்டியன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இதற்கான பதிலை கொடுத்து இருக்கிறார்.

வீடியோவில் தான் நடித்து வரும் படங்கள் குறித்துப் பேசியிருக்கிறார். ‘பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாளராகச் செல்லவுள்ளீர்களா’ என்ற ரசிகர்களின் கேள்விக்கு ரம்யா பாண்டியன், “தெரியவில்லை. இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சி தரப்பிலிருந்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அப்படித் தொடர்பு கொண்டால்தானே சொல்ல முடியும்” என்று பதிலளித்து உள்ளார்.

மேலும், புதிய போட்டோ ஷூட் ஒன்று எடுத்துள்ளதாகவும் விரைவில் அதை அப்டேட் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். தனக்கு பிடித்த நடிகர் விஜய் என்றும், எப்போதுமே ரஜினி ரசிகை எனவும் ரம்யா பாண்டியன் தெரிவித்து உள்ளார்.