மீண்டு வா சென்னையே.. மீண்டும் வா.. சென்னையே எழு…

Read Time:5 Minute, 27 Second

மார்ச் மாதம் இரண்டாவது வாரம் வியாழக்கிழமை தொடங்கி இதுநாள் வரை 6 வது ஊரடங்கை சந்தித்து வருகிறது சென்னை பெருநகரம். உழைக்கும் மக்கள் கூட்டம்கூட்டமாக வாழ்ந்த இடம் முடங்கிபோனதை நினைத்து மனம் வெம்பியது.

ஈ, காக்காய் ஏதுமில்லை. அங்காடிகளும் திறக்கவில்லை. முதல் ஊரடங்கில் பயந்த கூட்டம் இரண்டாவது ஊரடங்கில் சற்று வெளியே தலைகாட்டியது. மூன்றாவது ஊரடங்கில் இன்னும் சற்று அதிகமாய். நான்காவது மற்றும் ஐந்தாவது ஊரடங்கில் தான் தோற்றது சென்னை. கொரோனா அதி தீவிரமாக பரவியது இந்த காலகட்டத்தில் தான்…

என்ன காரணம்?

பத்திரிகை, டிவி மற்றும் சமூக வலைத்தளங்கள் என்று படித்த, பார்த்த, கேட்ட, தேடிய இடங்களில் எல்லாம் கொரோனாவின் விழிப்புணர்வு பிரசாரத்தை செவ்வனே செய்தனர். அரசும் விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டது உண்மை.
போதாத குறையாக செல்போனில் டயல் செய்த அடுத்த வினாடியே கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் காதை துழைத்ததை எவரும் மறுக்க முடியாது.
இருப்பினும் கொரோனா அதி தீவிரமாக பரவுவதை ஏன் தடுக்க முடியவில்லை. காரணம் யார்? இந்த கேள்விக்கு விடைசொல்வதற்கு முன் ஒவ்வொரு தனி மனிதனும் தலை குனியவேண்டியது அவசியம்.

நான் யாரு…

இங்கிலாந்து பிரதமருக்கே கொரோனா தொற்று உறுதியானதை படித்தும் நாம் திருந்தவில்லை… ஹே… எனக்காவது கொரோனா வருவதாவது… என்றுஎண்ணி வெளியில் செல்லும் போதெல்லாம் மாஸ்க் அணியாமல் அல்லது மாஸ்கை சரியாக அணியாமல் மூக்குக்கு கீழே தொங்கும் வண்ணம் அணிந்து கொண்டு கொரோனாவின் தாக்கம் தெரியாமல் அலட்சியமாக பலர் சென்றது முதல் குற்றம் என்றால்…

அனைத்து கடைகளும் (நான்காவது மற்றும் ஐந்தாவது முழு ஊரடங்கில்) மூடி இருக்க, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மினி வேன்களில் புதிய வியாபாரிகள் முளைக்க வந்தது வினை. இவர்கள் தொழில்சார்ந்த வியாபாரிகள் அல்ல என்பது அவர்களின் அணுகுமுறையிலேயே தெரிந்தது.

வியாபாரிகள் கண்டிப்பாக கையுரையும் மாஸ்க்கும் அணியவேண்டியது கட்டாயம் என்று விதிமுறையை இந்த திடீர் வியாபாரிகள் காற்றில் பறக்கவிட்டனர். அப்படியே மாஸ்க் அணிந்து இருந்தாலும் அது மூக்குக்கு கீழேதான் தொங்கியது.
இவர்களே இப்படி என்றால் இவர்களிடத்தில் பொருட்கள் வாங்க சென்ற மக்களாகிய நாம் வரிசையில் நின்றோமா இல்லை.

காய்கறி தீர்ந்துவிடப்போகிறது என்ற சுயநலம் அனைவரையும் முண்டி அடித்து வாங்கச்சொன்னது. நல்ல பொருட்களாக இருக்கவேண்டுமே என்று (ஒவ்வொரு பொருட்களையும் வியாபாரி தான் எடுத்து எடைப்போட்டு தரவேண்டும் என்ற பொது விதியையும் மறந்து) நாமே அனைத்து பொருட்களிலும் கை வைத்து ஒருவரிடம் இருந்த கொரோனாவை அனைவரிடத்திலும் பரப்புவதற்கு காரணமாக இருந்தோம் என்பதும் நிதர்சனம்.

மொத்தத்தில் நமக்கு கொரோனா வராது என்று அலட்சியமாக இருந்தது தான் ஒட்டுமொத்த கொரோனா பரவலுக்கும் முழு முதற்காரணம். நடந்து போகும் போது பொது இடத்தில் காரி துப்புவது… எந்தவித தடுப்பும் இல்லாமல் மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் வேகமாமாமாக தும்முவது… என்று தனிமனித ஒழுக்கத்தை பலர் காற்றில் பறக்கவிட்டதின் விளைவே இந்த பரவலுக்கு காரணம்.

இனியும் பூட்டிவைத்தால் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுவிடும் என்று எண்ணி நிறைய தளர்வுகளுடன் நேற்று முதல் (6/7/2020) சென்னை விழித்திருக்கிறது.

காலையிலேயே வெளியில் சென்றபோது நிரம்ப மகிழ்ந்தேன்… நாகேஷ் பாடியதைப்போன்று மீண்டும் பாடத்தோன்றியது…

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவா போறவக யாருமில்லே
இங்கே சரியா தமிழ்பேச ஆளுமில்லே என்று.

பழைய சென்னையை பார்க்க முடிந்தது. அனைவரும் காரிலும், பைக்கிலும் பறந்தனர். ஹெல்மெட்டுடன் மாஸ் க்கும் பலர் அணிந்து சென்றனர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

இதுவும் ஒரு விழிப்புணர்வு மடல் தான்… இனியாவது அனைவரும் கண்டிப்பாக மாஸ்கை சரியாக அணிவோம். தனிமனித இடைவெளி காப்போம்… கொரோனாவை துரத்தி அடிப்போம்…

மீண்டு வா சென்னையே.. மீண்டும் வா.. சென்னையே எழு…

Source: Gopalakrishnan Gopi