காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவும்… உலக விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Read Time:3 Minute, 42 Second

உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்து வருகிறது. இந்த கொடிய வைரஸ், மனிதனின் சுவாச பாதையில் பாதிப்பை உண்டாக்கி அதன் மூலம் மரணத்தை விளைவிக்கிறது.

வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் தெறிக்கும் எச்சில் துளிகள் மூலம் அடுத்தவருக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், தொற்று பாதித்தவர் பயன்படுத்திய பொருட்களை தொட்டு முகத்தில் தேய்ப்பதாலும் எளிதில் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் கூறியிருந்தது. வைரஸ் கண், மூக்கு மற்றும் வாய் வழியாகவே மனித உடலுக்குள் செல்கிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக உலக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். இந்த தகவலை அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

கொரோனா குறித்த சமீபத்திய ஆய்வுகளில், வைரஸ் காற்று வழியாக பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. இதனால் மக்கள் மீண்டும் மதுபான விடுதிகள், உணவு விடுதிகள், அலுவலகங்கள், சந்தைகள், கேளிக்கை விடுதிகளுக்கு செல்லும்போது கொத்துக்கொத்தாக நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த நோய்த்தடுப்பு பரிந்துரைகளை திருத்தி வெளியிட வேண்டும்’ என கடிதத்தில் விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், நோய் பரவலில் காற்று வழியான பரவல் குறிப்பிடத்தக்க காரணியாக இருந்தால், குறிப்பாக மோசமான காற்றோட்டம் கொண்ட நெரிசலான இடங்களில் கட்டுப்படுத்துவதற்கான விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளனர்

இருப்பினும், கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுவதாக விஞ்ஞானிகள் கூறுவதை நம்பமுடியாது என உலக சுகாதார நிறுவனத்தின் நோய்த்தொற்று கட்டுப்பாட்டின் தொழில்நுட்பப்பிரிவு தலைவர் டாக்டர் பெனிடெட்டா அலிகிரான்சி கூறியிருக்கிறார்.

‘கொரோனா தொற்று காற்று மூலம் பரவுகிறதா? என்பதை கண்டறிவதற்கான ஆய்வுகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இருப்பினும், அதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இது தொடர்பாக வலுவான வாதங்கள் நடந்து வருகிறது’ என்று அலிகிரான்சி கூறியிருக்கிறார்.