லடாக் மோதல்: ‘ஒரே நிமிடத்தில் 128 இலக்குகளை தகர்க்கும்…’ அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விமானப்படையில் இணைத்தது எப்படி?.. விபரம்:-

Read Time:4 Minute, 36 Second

லடாக் மோதலை அடுத்து தரையிலும் வான்வெளியிலும் சீன அச்சுறுத்தல்களுக்கு இந்தியா தரப்பில் முதன்மை பதிலடியை தெரிவிக்கும் வகையில் முன்வரிசையில் AH-64 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் நின்றன.

மே 5-ம் தேதி கிழக்கு லடாக்கில் சீனாவுடன் மோதல் ஏற்பட்ட பின்னர், அமெரிக்காவின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை விரைந்து பெற இந்தியா முன்னுரிமை வழங்கியது. அதன்படி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு விதிகளிலிருந்து மத்திய அரசு போயிங் ஒப்பந்தக்காரர்களுக்கு சிறப்பு விலக்கு அளித்தது.


இதனையடுத்து இந்தியாவுக்கு வரவேண்டிய 5 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் கடந்த மாதம் விரைந்து இந்தியா வந்து சேர்ந்துள்ளது. பின்னர் அதே வேகத்தில் ஹெலிகாப்டர்கள் உடனடியாக சோதனை செய்யப்பட்டு லடாக் விரைந்து இருக்கிறது. “ராணுவம் மிக மோசமான சூழ்நிலைக்கு தயாராக இருக்க விரும்பியது. அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது” என்று அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ஏஎச்-64இ ரகத்தை சேர்ந்த 22 ஹெலிகாப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு 2015-ம் ஆண்டு செப்டம்பரில் கையெழுத்திட்டது. இந்தியாவிக்கு ஏற்கனவே 17 ஹெலிகாப்டர்களை வழங்கிவிட்ட போயிங் நிறுவனம் 5 ஹெலிகாப்டர்களை 2020 மார்ச்சில் தருவதாக அறிவித்து இருந்தது. இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக திட்டமிட்டப்படி வருவதில் தொய்வு நேரிட்டது.

இதற்கிடையே லடாக்கில் சீனாவுடன் மோதல் நேரிட்டதும் இந்தியா தாக்குதல் ஹெலிகாப்டர்களை விரைந்து பெற்றுள்ளது. முன்னதாக இவ்வகை தாக்குதல் ஹெலிகாப்டர்களை எல்லையில் நிறுத்தியிருந்தது.

அப்பாச்சி ஹெலிகாப்டர் பற்றிய சில முக்கிய தகவல்கள்:-

  • உலகின் அதிநவீன போர் ஹெலிகாப்டரான அப்பாச்சி, தற்போது அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் விமானப்படையில் பிரதான ஹெலிகாப்டராக பயன்படுத்தப்படுகிறது.
  • இரண்டு டர்போஷாஃப்ட் ரக என்ஜின்களை கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள் மணிக்கு 289 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.
  • அனைத்து விதமான காலநிலைகளிலும் செயல்படும் திறன் கொண்டவையாகும்.
  • ஹெலிகாப்டர்களில் இலக்குகளை கண்டறிய, பின்தொடர, தாக்குதல் தொடுக்கவும் ஏதுவாக லேசர், இன்ஃபராரெட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
  • ஹெலிகாப்டரால் ஒரே நிமிடத்தில் அதிகபட்சமாக 2,800 அடி உயரம் வரையில் மேல்நோக்கி பறக்க முடியும்.
  • மிக அதிகளவிலான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், ஒரே நிமிடத்தில் 128 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் திறன் படைத்தவையாகும்.
  • துப்பாக்கிகள் மட்டுமின்றி, அதிநவீன ராக்கெட்டுகள், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர்கள், இரவுநேரத்திலும் அதிவிரைவாக தாக்குதல் நடத்தும் திறனையும் கொண்டது.
  • இந்திய விமானப்படையின் முக்கிய போர் ஹெலிகாப்டராக விளங்கி வரும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட மிக்-35 ரக ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைத்து அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அதிகரிக்கப்படுகின்றன.