“சினிமா பின்புலம் இல்லாமல் உயர்ந்தேன்” நடிகை ரகுல்பிரீத் சிங்

Read Time:2 Minute, 26 Second

வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தினால் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பலரும் எப்படியெல்லாம் வாரிசு நடிகர்களாலும், சினிமாவில் ஆதிக்கம் செலுத்துபவர்களாலும் எவ்வாறு நசுக்கப்படுகிறோம் என்பதை சமூக வலைதளங்களில் விவரித்தனர். இந்நிலையில் “சினிமா பின்புலம் இல்லாமல் உயர்ந்தேன்” என நடிகை ரகுல்பிரீத் சிங் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக ரகுல் பிரீத் சிங் பேசுகையில், நான் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தேன். யாருடைய ஆதரவும் இல்லாமல் என் மீது இருந்த நம்பிக்கையினால் மட்டுமே இந்த துறையில் அடியெடுத்து வைத்தேன். எனக்கு வந்த பட வாய்ப்புகளை நல்ல படியாக உபயோகப்படுத்தி கொண்டேன். தொடர்ந்து படங்களில் ஓய்வில்லாமல் நடித்த போது இப்போது நிலைக்கு வளர்ந்து விட்டேன்.

இந்த பயணத்தை நினைத்து பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கதாநாயகிகள் சினிமாவில் கொஞ்ச காலம் தான் நிலைத்து இருக்க முடியும் என்பது எல்லோரும் சொல்வதாகும். நானும், இந்த துறைக்கு ஒரு 5 வருடங்களாவது இருந்தால் போதும் என்ற வேகத்தோடுதான் வந்தேன். ஆனால், கடவுள் ஆசிர்வாதம் ரசிகர்கள் ஆதரவோடு 10 ஆண்டுகளை எனது பயணம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

ஒரு நடிகையாக என்னை இன்னும் மெருகேற்ற வேண்டியது உள்ளது. ரசிகர்கள் மனதில் நிற்கிற மாதிரி மேலும் சில சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். நான் நடிக்கிற ஒவ்வொரு படத்தையும் எனது முதல் படம் மாதிரி நினைத்துதான் பணியாற்றுகிறேன். கொரோனா நெருக்கடி முடிந்து படப்பிடிப்பு அரங்குக்கு செல்லும் நாளை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.