சீனா எல்லையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் `சினுக்’, அப்பாச்சி மற்றும் மிக்-29…

Read Time:4 Minute, 0 Second

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா – சீனா இடையே ஏற்கனவே கைகலப்பு நடந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து எல்லையில் சீனா கூடுதல் படைகளை குவித்தது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தரப்பிலும் படைபலத்தை அதிகரித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

சினுக் ஹெலிகாப்டர்.

இதனால் ராணுவ தளபதி நரவானே சமீபத்தில் லடாக் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆய்வு செய்தார். பிரதமர் மோடியும் கடந்த வெள்ளிக்கிழமை லடாக் சென்று எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலவரம் பற்றி தரைப்படை, விமானப்படை, இந்திய-திபெத்திய பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையை மேற்கொண்டார். இதற்கிடையே எல்லையில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் தூதரக மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய-சீன ராணுவ உயர் அதிகாரிகள் இடையே கடந்த ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற 3-வது சுற்று பேச்சுவார்த்தையின் போது, மோதல் போக்கை விலக்கிக் கொள்வது என்றும், எல்லையில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள முன்னுரிமை அளிப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஒளிமறைவற்ற முறையில் நடைபெற்றது. இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மோதல் நடைபெற்ற லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின் வாங்கின. எல்லையில் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் எல்லையில் இந்தியா கண்காணிப்பை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அப்பாச்சி ஹெலிகாப்டர்.

எல்லையில் இரவு நேரங்களில் இந்திய விமானப்படையின் சினுக், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் மிக் 21 ரக விமானங்கள் ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன.

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து சினுக் ரக ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கியிருக்கிறது. உலகிலேயே அதிகத்திறன் கொண்ட சரக்கு போக்குவரத்து ஹெலிகாப்டர் இது. இவற்றினால் படை வீரர்கள், போர் தளவாடங்களை உடனடியாக எடுத்துச் செல்ல முடியும். வீரர்களுக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக எடுத்துச் செல்லும் சேவையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. மிக் 29 ரக போர் விமானங்களும் எல்லை நிலைகளில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இவை இரவு நேர ஆப்ரேஷன்களை மேற்கொள்கிறது. இரவு நேர ரோந்து மிகவும் முக்கியமானது, அதனை தீவிரமாக மேற்கொள்கிறது.

மிக் 29 விமானம்.

எந்தஒரு சூழ்நிலையையும் எல்லையில் எதிர்க்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக விமானப்படை அதிகாரி தெரிவித்து உள்ளார். அப்பாச்சி தாக்குதல் ரக ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டு உள்ளது.