உலக அளவில் வைரலாகும் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் செங்கமலம் யானையின் ‘பாப் கட்டிங்’ ஸ்டைல்…!

Read Time:4 Minute, 28 Second

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெரிய கோவில் என்று அழைக்கப்படுவது ராஜகோபாலசாமி கோவில் ஆகும். இந்த கோவிலில் இருக்கும் யானை செங்கமலம் நீண்ட தலைமுடியை கொண்டது. இதன் முடி பட்டு ஜரிகை போல மிகவும் மெருதுவாக காணப்படுகிறது.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரையும் தன்னுடைய சிகை அலங்காரத்தினால் ஈர்த்துவிடுகிறது செங்கமலம். மகிழ்ச்சியுடன் செங்கமலத்தோடு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள் பக்தர்கள்.

செங்கமலத்தினால் குழந்தைகளுக்கும் கூதுகலம் அடைகின்றனர். இந்த யானை, மனிதர்களைப்போலவே பாப் கட்டிங் ஸ்டைலில் தலை முடியை வெட்டிக்கொண்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். யானை ‘பாப் கட்டிங் செங்கமலம்’ என்றே அப்பகுதியில் எல்லோராலும் அழைக்கப்படுகிறது. யானைக்கு பாப் கட்டிங் வெட்டிவிடுவதோடு, அதை தன் குழந்தையை போல பராமரித்துவரும் பாகன் ராஜகோபாலையும் மகிழ்ச்சி பொங்க அனைவரும் பாராட்டுகின்றனர்.

சிறு வயதில் நம்முடைய தாயார் தலை சீவி, சிங்காரித்து பள்ளிக்கு அனுப்புவார். பெண்கள் தலை சீவாமல் திரிந்தால், ஏன் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு சுற்றுகிறாய்? என்ற திட்டு விழும். . இதெல்லாம் கொஞ்சம் மாறினாலும், பொதுவாக தலை சீவாமல் நாம் வெளியில் செல்வது கிடையாது. இதுபோன்ற நிலைதான் செங்கமலத்திற்கும்.

செங்கமலம் தினமும் காலை மாலை என இரண்டு நேரமும் குளித்துவிடும். அதன்பிறகு, தலை சீவி மேக்கப் போடுவதற்கு ஒவ்வொரு தடவையும் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் ஆகும்.

பெண்கள் எப்படி தங்களது கூந்தலை தனியே கழுவி நளினமாக சுத்தப்படுத்துவார்களோ, அதேபோல செங்கமலம் யானையின் தலையில் நீண்டு தொங்கும் கூந்தலுக்கு பிரத்யேகமாக ஷாம்பூ பயன்படுத்தி நுரை பொங்க தேய்த்து கழுவப்படுகிறது. பின்னர், வழக்கமாக தலைக்கு குளித்த பெண்கள் செய்வதுபோல வெயிலில் சற்று நேரம் கோதிவிட்டு, அதன் கூந்தல் காய வைக்கப்படுகிறது. தொடர்ந்து, சிக்கல் விழாமல் நேர்த்தியாக சீவி விடப்படுகிறது.

ஏற்கெனவே இதன் தலைமுடி பாப் கட்டிங் ஸ்டைலில் வெட்டிவிடப்பட்டுள்ளதால், அதன் கூந்தல் முடி நெற்றியில் விழும்படி அழகாக சீவிய பின்னர், முக அலங்காரம் தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள கோவில்கள், மடங்கள் மற்றும் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் அமைக்கப்பட்டு அவற்றுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு அளிக்கப்படுவது வழக்கம். கோவை மாவட்டம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் நலவாழ்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் அழகிய முடியுடன் காட்சியளிக்கும் செங்கமலம் யானைக்கு ரசிகர்கள் அதிகம்தான். முகாமை பார்வையிட வரும் பொதுமக்கள் பலரும், வித்தியாசமாகவும் அழகுடனும் காட்சியளிக்கும் செங்கமலத்தை காணவே பெரிதும் விரும்புவர்.

இதனால், முகாமில் உள்ள யானைகளில் செங்கமலமே திரை நட்சத்திரக் கதாநாயகிபோல முகாமுக்குள் வலம் வரும், தனித்த கவனமும் பெறும். இப்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது செங்கமலம். சுதா ராமன் என்ற ஐ.எப்.எஸ். அதிகாரி வெளியிட்ட செங்கமலத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் செங்கமலம் தொடர்பான தகவல்களை கூகுளில் தேடி படித்து பரவசம் அடைகின்றனர். செங்கமலத்தை மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பார்க்கலாம்..