பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் வகுப்பு… வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற டிரம்ப் திட்டம்…

Read Time:4 Minute, 18 Second

அமெரிக்காவில் உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கல்வியை படிக்க வேண்டும் என்ற மோகம் உலக நாடுகள் முழுவதும் இருந்து வருகிறது. இருப்பினும், சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர்.

இவ்வாறு வெளிநாட்டு மாணவர்களுக்கு எப்1, எம்1 போன்ற விசாக்கள் வழங்கப்படுகிறது.

தற்போது உலகை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இதில் அமெரிக்காவும் பெரிதும் அல்லல்படுகிறது. இதனால் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகை தடைபட்டு இருக்கிறது. இதனால் அங்கு படித்துவரும் மற்றும் புதியதாக சேர விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் நடப்பாண்டு கல்வி குறித்து குழப்பத்தில் உள்ளனர்.

இதனிடையே 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் கொரோனா பாதிப்புகள் குறையாத காரணத்தினால் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கி இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தகவலாக பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி விசாக்கள் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு குடியுரிமைத்துறை தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;-

பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டால் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டில் தங்க அனுமதி கிடையாது. குறிப்பாக முழுவதும் ஆன்-லைனில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் எப்1, எம்1 விசாக்கள் மூலம் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதி கிடையாது. தற்போது அமெரிக்காவில் இத்தகைய பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டு படித்துவரும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

மாணவர்கள் சட்டபூர்வமான நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து தங்கி இருக்க வேண்டும் என விரும்பினால் ஆன்-லைன் அல்லாத பல்கலைக்கழகங்களுக்கு மாறிக்கொள்ள வேண்டும்.

இல்லையெனில், அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடங்குவது மட்டுமின்றி குடியேற்றம் ரீதியிலான விளைவுகளையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடும். மேலும், நடப்பாண்டு ஆன்-லைன் கல்விக்கு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை வழங்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உட்பட சில பல்கலைக்கழகங்கள் அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என்று கூறியிருக்கிறது. இந்நிலையில் குடியுரிமை துறையின் இந்த அறிவிப்பு இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே வெளிநாட்டு மாணவர்களை நாடு கடத்தும் விதமாக அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் கல்வியாளர்கள் மற்றும் எதிர்க் கட்சி எம்.பி.க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய மற்றும் கொடூரமான நடவடிக்கை என அவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.