கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் தடுப்பு மருந்துகள் எவ்வாறு சோதிக்கப்படுகின்றன…? தெரிந்துக்கொள்வோம்…

Read Time:8 Minute, 6 Second

இந்தியாவும் கொரோனா வைரசுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ‘கோவேக்சின்’ மற்றும் ‘ஜைகோவ்-டி’ என இரு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மருந்துகள் விலங்குகளுக்கு செலுத்திய சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. இதையடுத்து இரு மருந்துகளையும் மனிதர்களுக்கு செலுத்தி பார்ப்பதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தான கோவாக்ஸின் மருந்தை மனிதர்கள் மீதான கிளிக்கல் பரிசோதனை விரைவாக முடித்து ஆக்ஸட் 15-ம் தேதி அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது இதற்கு மருத்துவ வல்லுநர்கள், ஆய்வாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பிலிருந்து பின்வாங்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் ஒரு தடுப்பூசி மருந்து எவ்வாறு சோதிக்கப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்…

இந்தியாவில் முக்கியமான தடுப்பூசி மருந்துகள் 4 தரநிலைகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பு மருந்து சோதனையில் முதலில் மருந்தை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்வார்கள். இந்த ஆய்வுக்காக எலிகள் அல்லது குரங்கு போன்ற விலங்குகளை தேர்வு செய்வார்கள்.

மனிதன் பாலூட்டிவகையென்பதால் அதே வகையிலான விலங்கு தேர்வு செய்யப்படுகிறது. இதில் எந்த விலங்கை தேர்வு செய்வது…? எத்தனை விலங்கை தேர்வு செய்வது என்பது சோதனையை பொறுத்து மாறுபடும். விலங்குகளிடம் மருந்து சோதனையில் வெற்றிக்கண்டால் (அதாவது பக்க விளைவின்றி குறிப்பிட்ட நோக்கத்தினை துல்லியமாக அடைகிறது என்றால்) மனிதர்களிடம் 4 படிநிலைகளில் சோதனை மேற்கொள்ளப்படும்.

மனிதனிடம் பரிசோதனை என்று வரும் போது மருந்தை எடுத்துக்கொள்பவர்களிடம் அனைத்து விதமான படிநிலைகள் தொடர்பாக ஆலோசனையை வழங்கிய பின்னர்தான் சோதனையை தொடங்க வேண்டும். இப்படி ஆய்வுக்கு ஒப்புக்கொண்டு தேர்வு ஆகும் நபர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்படுவார்கள். ஒரு பிரிவினர் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்கள் ஆரோக்கியமானவர்கள் என்று.

முதல்முறையான சோதனையென்றால் இதற்காக குறைவான நபர்களே எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இரு பிரிவிலும் சமமான எண்ணிக்கையில் மனிதர்கள் இடம்பெறுவார்கள்.

முதல்நிலை பரிசோதனையில் விலங்குகளுக்கு கொடுக்கப்பட்ட அளவைவிட சிறிது அதிகமான மருந்தை எடுத்து பரிசோதனைக்கானவர்களுக்கு வழங்கப்படும். சில நபர்களுக்கு உண்மையான மருந்தை கொடுக்காமல் மருந்தின் தன்மையெற்றவையை கொடுப்பார்கள். அப்போது மருந்து கொடுக்கப்பட்ட நபர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை மிகவும் நுட்பமாக பதிவு செய்வார்கள்.

ஒவ்வொரு நிலையிலும் ஆய்வில் பங்கேற்பவர்களின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கணக்கில் எடுத்து ஆய்வு மேற்கொள்வார்கள். குறிப்பிடாக இதயம், நுரையீரல், இரத்தம், மத்திய நரம்பு மண்டலம் மற்றும் இனப்பெருக்க மண்டலம் ஆகியவை தொடர்ந்து கூர்மையாக கவனிக்கப்படும். மாற்றங்களை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும்.

முதல்கட்ட சோதனையானது வெற்றிப்பெற்றால் இரண்டாம் கட்ட சோதனையானது தொடங்கும். அதற்கான அனுமதியும் வழங்கப்படும். இதில், சோதனைக்கு உட்படுத்தப்படுவர்களின் எண்ணிக்கையானது முதல் நிலையைவிட சற்று அதிகமாக இருக்கும்.

இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என பலதரப்பட்ட வயதினை சேர்ந்தவர்கள் சோதிக்கப்படுவார்கள். இப்படிநிலையில் முதல்கட்டமாக செலுத்தப்பட்ட மருந்தைவிடவும் சற்று அதிகமாக மருந்து செலுத்தபடும். இரண்டாம் கட்ட ஆய்வு என்பது மிகவும் முக்கியமானது. மருந்து செலுத்தப்பட்டவர்களின் ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் குறைபாடுகளை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். தடுப்பு மருந்து ஏதாவது பாதகமான விளைவை ஏற்படுத்துகிறதா..? என்பதை பார்க்க வேண்டும். இரண்டாம் கட்ட முடிவை கொண்டு ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ளலாமா என்பது தொடர்பாக விஞ்ஞானிகள் முடிவு செய்வார்கள்.

மூன்றாம் கட்ட சோதனையானது ஒரே பகுதியில் இல்லாமல் வெற்று வாழ்விடங்களை சார்ந்தவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும். இதற்காக சுமார் 1400 பேர் வரையில் சோதனைக்காக எடுத்துக்கொள்ளப்படலாம். இந்த நிலையில் தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் தொடர்பாக ஆய்வு செய்வார்கள்.

அதேபோல், தடுப்பு மருந்து ஏதேனும் பக்க விளைவை ஏற்படுத்துகிறதா…? என்பது தொடர்பாக மிகவும் தீர்க்கமாக சோதனையை மேற்கொள்வார்கள். இந்த படிநிலையானது மற்ற படிநிலையைவிடவும் அதிகமான காலக்கெடுவை எடுத்துக்கொள்ளும். மருந்து, மலைப்பகுதி, நகர்ப்பகுதி, கிராமப்பகுதி மற்றும் கடலோரப் பகுதியென பல்வேறு வாழ்விடங்களில் வாழும் அதிகமான மக்களிடம் சோதிக்கப்படும். சில நேரங்களில் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களுக்கு மருந்து செலுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்த நிலையில் மருத்துவ நிபுணர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பல்வேறு துறை சார்ந்த குழுவினரிடம் மருந்தின் செயல்திறன் குறித்து கலந்துரையாட வேண்டும். இந்த நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின்படியே நான்காம் நிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் அதிகமான மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதாவது மருந்துகள் மருத்துவர்களிடம் தரப்படும். மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்தை செலுத்துவார்கள்.

இதனால் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மருந்து செலுத்தப்படும். இப்படி மருந்துகளை மருத்துவர்கள் செலுத்தும் போது அவை விளைவுகளை ஏற்படுத்தினால் அவர்களுக்கு உடனடியாக தெரிந்துவிடும். இந்த நிலைகளை ஒரு மருந்து கடக்க மாத காலம் அதிகமாக ஆகும். எனவேதான், இந்தியாவில் ஆகஸ்ட் 15-ம் தேதி தடுத்து மருந்து வந்துவிடும் என்ற கூற்றை விஞ்ஞானிகள் ஸ்திரமாக எதிர்த்தனர். இந்தியாவிடம் இருந்து ஒரு ஆக்கப்பூர்வமான கொரோனா தடுப்பு மருந்து கிடைக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.