கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல்… இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த திட்டம்… நடந்தது என்ன…?

Read Time:5 Minute, 10 Second

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானத்தில் வந்த பொருட்களை கடந்த 5-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் பார்சல் ஒன்று வந்திருந்தது.

இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய சரக்கு பிரிவில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 30 கிலோ தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.13½ கோடி ஆகும்.

வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரும் கும்பல் ஒன்று இந்த தங்கத்தை அனுப்பி வைத்திருப்பதாக தெரியவந்தது. தூதரக பொருட்களுக்கு பரிசோதனையில் இருந்து விலக்கு இருப்பதால் இந்த நூதன வழியை கடத்தல் காரர்கள் பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.

தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டதால் அது குறித்து உயர்மட்ட விசாரணை தொடங்கியது.

ஸ்வப்னா சுரேஷ்

விசாரணையில் தூதரக முன்னாள் ஊழியரான சரித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த கடத்தலின் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் என்பது தெரியவந்தது. இந்த ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டதை தொடர்ந்து பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும், விமான நிலையத்தில் சிக்கிய தங்கத்தை விடுவிக்குமாறு முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து முக்கிய அதிகாரி ஒருவர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இது தொடர்பாக பினராயி விஜயனின் முதன்மை செயலாளரும், ஐ.டி. துறை செயலாளருமான சிவசங்கர் மீது சந்தேகம் வலுத்தது. இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து சிவசங்கர் அதிரடியாக நீக்கப்பட்டார். தூதரகம் பெயரில் தங்கம் கடத்தல் விவகாரம் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. இந்த கடத்தலில் முதல்-மந்திரி அலுவலகத்தின் பெயரும் அடிபடுவதால், கடத்தலில் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி இருக்கின்றன.

தேசிய புலனாய்வு பிரிவு

இந்த கடத்தல் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணையை தொடங்கியது. அதன்படி சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத் ஆகிய 4 பேர் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று ஜுலை 11-ம் தேதி அவர்கள் இருவரும் பெங்களூருவில் தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் சிக்கியிருக்கின்றனர்.

ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பு?

இதற்கிடையே பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக இந்த தங்கம் கடத்தல் நடைபெற்று உள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக தென் இந்திய ஐ.எஸ். அமைப்பு இந்த கடத்தலின் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், கேரளாவில் இதற்கு முன் நடந்த முக்கியமான தங்கம் கடத்தல் வழக்குகளையும், அவற்றின் பயங்கரவாத பின்னணி குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். ஏனெனில் கேரளாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதி ஆதாரத்துக்கு தங்கம் கடத்தலையே ஐ.எஸ். அமைப்பு பயன்படுத்தி உள்ளதை என்.ஐ.ஏ. ஏற்கனவே உறுதி செய்து இருக்கிறது.

மேலும், இந்த தங்கம் கடத்தல் குற்றவாளிகளுக்கு தமிழ்நாட்டுடன் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.