கொரோனா வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசி ரஷியாவில் வெற்றி… மருந்து எவ்வாறு சோதிக்கப்பட்டது…? தெரிந்துக்கொள்ளுங்கள்…

Read Time:4 Minute, 47 Second

கொரோனா வைரஸ் நோய்க்கு (கோவிட் -19) எதிரான உலகின் முதல் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்ததாக Sechenov First Moscow State Medical University என்ற ரஷ்ய பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் மனித உயிர்களை குடித்துவரும் கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்றது. பல்வேறு மருந்துகள் சோதனையில் உள்ளன. சில மருந்துகள் மனித சோதனையில் உள்ளன. இப்பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி மருந்து ரஷியாவில் மனிதர்களிடம் சோதனை செய்ததில் வெற்றிகரமாக செயல்பட்டு உள்ளது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

ரஷியாவின் செசெனோவ் முதல் மாஸ்கோ மாநில மருத்துவ பல்கலைக்கழகம் ஜூன் 18 அன்று அந்நாட்டின் கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம் தயாரித்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை தொடங்கியது. இந்த பரிசோதனைக்கு ரஷ்ய சுகாதார அமைச்சகம் ஜூன் 16 அன்று அனுமதி அளித்து இருந்தது. 18-ம் தேதி பரிசோதனைக்கான பணிகள் தொடங்கியது. மருந்து பரிசோதனையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட முதல் குழுவினர் புதன்கிழமை குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளர். பரிசோதனையில் இடம்பெற்ற இரண்டாவது குழு ஜூலை 20-ம் தேதி வீடு திரும்புவார்கள் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் மருந்து தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் எவ்வாறு நடந்தன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்:-

  • ஆரோக்கியமான 18 தன்னார்வலர்கள் அடங்கிய முதல் குழுவுக்கு ஜூன் 18-ம் தேதியன்று தடுப்பூசி போடப்பட்டது.
  • 20 தன்னார்வலர்கள் அடங்கிய இரண்டாவது குழுவுக்கு ஜூன் 23 அன்று இருதய நோய்க்கான நடைமுறை ஆராய்ச்சி மையத்தில் வைத்து தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டு உள்ளது.
  • மருந்தை செலுத்த அனுமதி வழங்கிய தன்னார்வலர்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட ஆண்களும் பெண்களும் ஆவர்.
  • அவர்கள் ஒரு லியோபிலிஸ் செய்யப்பட்ட தடுப்பூசி மருந்து அல்லது ஒரு பவுடரைப் பெற்றுக்கொண்டார்கள்.
  • சில தன்னார்வலர்கள் மருந்தை பெற்றதும் தலைவலி மற்றும் உயர்ந்த உடல் வெப்பநிலையை அடைவதாக கூறியிருக்கின்றனர். ஆனால், தடுப்பூசி பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த அறிகுறிகள் முழுமையாக நின்றுவிடும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்து இருக்கிறது.
  • தன்னார்வலர்கள் செச்செனோவ் பல்கலைக்கழக வளாகத்தில் ஒற்றை அல்லது இரட்டை வார்டுகளில் வைக்கப்பட்டு உள்ளனர்.
  • தடுப்பூசி உட்செலுத்தப்பட்ட பின்னர் அவர்கள் 28 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு உள்ளனர். மற்ற நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகாமல் பாதுகாக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மருந்து பெற்றவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் மேலும் 6 மாதங்களுக்கு அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • தனிமைப்படுத்தலின் போது, தன்னார்வலர்களுக்கு உளவியல்ரீதியாக ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
  • கமலேயா நிறுவனம் உருவாக்கிய கோவிட் -19 தடுப்பூசி மருந்து இப்போது மாஸ்கோவில் உள்ள பர்டென்கோ ராணுவ மருத்துவமனையிலும் பரிசோதிக்கப்படுகிறது.
  • மருத்துவ பரிசோதனையின் போது மருந்துகளின் திரவ வடிவத்தை அங்குள்ள ராணுவ மருத்துவமனை பயன்படுத்துகிறது.

கொரோனாவுக்கு மருந்து கிடைத்துவிட்டது என்ற செய்தி மக்களை நிம்மதி அடைய செய்திருக்கிறது. இருப்பினும் சில காலம் மருந்து பெற்றவர்களுக்கு பக்க விளைவு உள்ளதா…? என்பதை தீவிர ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. விரைவில் மருந்து தயாராகும் என நம்புவோம்…