மூலிகை அறிவோம்… உடலுக்கு வைரம் பாயச் செய்யும் பிரண்டை…!

Read Time:10 Minute, 50 Second
Page Visited: 407
மூலிகை அறிவோம்… உடலுக்கு வைரம் பாயச் செய்யும் பிரண்டை…!

இன்றைய செயற்கையான வாழ்க்கை முறைக்கு மத்தியில் பல்வேறு நோய்களில் மனிதர்கள் சிக்கி தவிக்கிறார்கள். இதற்கு முதற் காரணமானது உணவு முறை தான் என்பது மருத்துவ நிபுணர்களின் ஒற்றை கூற்றாக இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் எதிர்க்கொள்ளாத நோயெல்லாம் சர்வசாதாரணமாக உடன் சுமக்கிறோம்.

இதற்கு காரணம் இயற்கையாக கிடைக்கும் தாவரப்பொருட்களின் பயன்பாட்டை நாம் குறைப்பதும் ஒரு காரணமாகவே அமைகிறது. இன்று சற்று உங்களுடைய உணவு முறையை பற்றி சிந்தியுங்கள்.. உங்களுடைய மனைவி, அம்மா சமையலில் எத்தனை விடுபடுகிறது என்று. இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களில் இருக்கும் மருத்துவ குணம் அறிந்தோ, அறியாமலோ முன்னோர்கள் அதனை பயன்படுத்தி பலன் பெற்று இருக்கிறார்கள். ஆனால், நாமோ அதனை முற்றிலுமாக விலக்குகிறோம்.

ஒரு நோய் பிரச்சினையென்றால் இயற்கை மருந்து பற்றி படித்து அதனை பயன்படுத்த தொடங்குகிறோம். ஆனால், உடனடியாக பலன் தரவில்லை என அதிலிருந்து விலகி மீண்டும் தவறையே செய்கிறோம். இனி இந்த தவறுகளை விலக்கி வைக்க முயற்சியுங்கள். இயற்கையாக கிடைக்கும் பொருட்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து உணவே மருந்து என்று வாழுங்கள்… இப்படி பயனளிக்கும் மூலிகைகள் பற்றி ஒவ்வொன்றாக தெரிந்துக்கொள்வோம்…

இன்று நாம் பார்க்க இருக்கும் மூலிகையானது பிரண்டையாகும். இது அதிகமான மருத்துவக் குணமுடையது.

வளரும் இடம்

கிராம புறங்களில் ஓடை, வேலி மற்றும் பொட்டல் வெளிகளில் வளரக்கூடியது கள்ளி வகையை சேர்ந்த பிரண்டை. ‘பார்ப்பதற்குப் பச்சை நிற ரெயில்பெட்டிகளை போல தொடர்ச்சியாக இருக்கும். கிராம வேலிகளில் காட்சியளித்த பிரண்டை, இப்போது அனைத்து காய்கறி சந்தைகளின் வாயிலிலும் நமது நலம் காக்க காத்து கிடக்கிறது. வயல்வெளியில் பயிரிட்டு உரமிட்டு, பூச்சி மருந்து தெளித்து, நீர் பாய்ச்சி, களை எடுத்து அதன் பிறகு அறுவடை செய்யும் நிலைக்கு இன்று பிரண்டையின் மகத்துவம் வெளியுலகம் தெரியவந்து இருக்கிறது.

பிரண்டை இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாக காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளிலேயே படர்ந்து இருக்கும்.

பிரண்டையானது சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகையில் இருக்கிறது. இதற்கு வஜ்ஜிரவல்லி’என்ற பெயரும் இருக்கிறது. Cissus quadrangularis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இது கொடி வகையை சேர்ந்தாகும்.

இதில் கால்சியம், சைடோஸ்டீரால் (Sitosterol), இரிடாய்ட்ஸ் (Iridoids), குவர்சிடின் (Quercitin), கரோட்டின் (Carotene), குவாட்ராங்குலாரின் – ஏ (Quadrangularin – A) போன்ற தாவர வேதிப்பொருட்கள் இதில் இருக்கின்றன. இதன் சாறு உடலில்பட்டால் சிறிது அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்த வல்லது. ஆனால், இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்கு பயன்படுகின்றன. இன்று இவை தமிழகத்தில் பயிரிடப்பட்டு வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மருத்து குணங்கள்

இப்போது நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது. இதனுடைய மருத்துவ குணங்களை அவ்வளவு எளிமையாக பட்டியலிட முடியாது. அத்தனை பலன் களை நமக்கு அள்ளித்தருகிறது.

அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு மற்றும் வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. பிரண்டையை துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் அளிப்பதாக இருக்கும். பிரண்டை துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க செய்யும். மேலும், ஞாபகசக்தியை பெருக்கும், மூளை நரம்புகளை பலப்படுத்தும், எலும்புகளுக்கு சக்தி தரும்.

பிரண்டையைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் ‘எலும்பு அடர்த்திக் குறைவு’ நோயின் (Osteoporosis) வருகையை தள்ளிப்போடலாம். பற்களின் பலத்தையும் பிரண்டை அதிகரிக்கும் என்பதை மறக்க வேண்டாம். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வு பிடிப்பை போக்கும் வல்லமை கொண்டது. வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வைரமாக வலுப்பெறும். உடல் வனப்பும் பெறும்.

மனித உடலில் எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்பு பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக பலர் முதுகுவலி மற்றும் கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் இன்னல் அடைவார்கள். இந்த பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டை துவையல் உதவி செய்யும்.

மேலும், மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். அப்படிப்பட்ட சூழலில் இந்த துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகமாகும். அஜீரணக் கோளாறுகளை போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்த துவையல் மிகவும் பலன் தரும். மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலை சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்புகளால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க அடிக்கடி பிரண்டை துவயலை சாப்பிடலாம். இந்தத் துவையலை சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்தாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் துவையலை சாப்பிடுவதன் மூலம் பலன் பெறலாம்.

துவையல் செய்யும் முறை

  1. பிரண்டை தண்டுகளின் மேல் தோலை நன்றாக அகற்ற வேண்டும்.

    அதில் உள்ள நாரையும் அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் மிதமாக வதக்க வேண்டும்.

  2. அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.

    சுவைக்காக தேங்காய், உளுந்து உள்ளிட்டவையும் சேர்க்கலாம்.

  3. பின்னர், கடுகு, உளுந்தம் பருப்புடன் தாளித்தால் துவையல் ரெடி.

    துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

இலையை எப்படி துவையல் செய்வது…?

பிரண்டையின் இலையிலும் சுவையான மற்றும் ஆரோக்கியமான துவையல் செய்யலாம். இதை சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண் மற்றும் மூல நோய் போன்றவை குணமாகும். இலை 100 கிராம், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு – 3 பல், மிளகு – 5, காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மஞ்சள், உப்பு ஆகியவை தேவையான அளவு எடுக்க வேண்டும்.

பின்னர் முதலில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கி, ஏற்கெனவே அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்தால் துவையல் தயார். நலம் பெற படிப்பதுடன் நிறுத்திவிடாமல் உணவில் சேர்க்க பாருங்கள்…

0 0
Happy
Happy
50 %
Sad
Sad
0 %
Excited
Excited
50 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %