ராஜஸ்தான் காங்கிரசிலும் பா.ஜனதா புயல்… ஆனால், ஆட்சியை பிடிக்க முடியுமா…? விரிவாக பார்க்கலாம்…

Read Time:8 Minute, 23 Second

மத்திய பிரதேசம் மாநிலத்தில் 4 மாதங்களுக்கு முன்னர் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசில் இருந்து இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறியதால் கமல்நாத் ஆட்சியே கவிழ்ந்தது.


காங்கிரசிலிருந்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் வெளியேறிய சிந்தியா பா.ஜனதாவில் ஐக்கியமானார். இதுபோன்ற ஒருநிலையாக ராஜஸ்தான் காங்கிரஸ் அரசிலும் பா.ஜனதா புயல் கடுமையாக வீசுகிறது. முதல்-அமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் அங்கு உச்சமடைந்திருக்கிறது.

அசோக் கெலாட்.

இளம் தலைவர்களை புறம் தள்ளுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் காங்கிரசுக்கான சோதனை காலம் அத்தனை எளிதில் முடிந்துவிடாது போலிருக்கிறது என்பதைதான் சூழ்நிலை காட்டுகிறது. 2018-ல் ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றிப்பெற சச்சின் பைலட்டும், மத்திய பிரதேசத்தில் வெற்றிப்பெற சிந்தியாவும் காரணமாக இருந்தனர். ஆனால், அவர்களுக்கு முதல்-அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

இதனையடுத்து மோதல் விரிவாகி இன்று காங்கிரசைவிட்டே செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ராஜஸ்தானில் சச்சினை முன்னிலையில் வைத்துக்கொண்டு திரைமறைவில் பா.ஜனதா காய் நகர்த்துவதாகக் கருதப்படுகிறது. பா.ஜனதாவில் இணைப்போவது இல்லை என்று சச்சின் பைலட் சொன்னாலும் பா.ஜனதா தலைவர்களுடன் அவரது தரப்பு பேசிவருவதாகவே செய்திகள் வெளியாகிவருகிறது. எனவே, ராஜஸ்தான் காங்கிரசிலும் பா.ஜனதா புயல் தாக்க தொடங்கிவிட்டது என்றே புலப்படுகிறது. சச்சின் பா.ஜனதா செல்வாரா…? என்ற கதை ஒருபுறம் இருக்க பா.ஜனதா ஆட்சிக்கு வந்துவிடுமா…? என்ற் கேள்வியும் எழுகிறது. இது, எளிதாக நடக்குமா…? என்ற கேள்வியும் தொடர்கிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையின் பலம் ஆதரவுப்பற்றி தெரிந்துக்கொள்வோம்.

ராஜஸ்தான் சட்டசபையில் பலம் விபரம்:-

200 உறுப்பினர் ராஜஸ்தான் சட்டசபையில் ஆட்சியமைக்க 101 பேரின் ஆதரவு இருந்தால் போதுமானது. காங்கிரஸ் கட்சியோ 124 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருப்பதாக ஆட்சியில் இருந்தது.

காங்கிரஸ்: 107
பாரதிய பழங்குடியினர் கட்சி : 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் : 2
ராஷ்டீரிய லோக் தளம்: 1
சுயேட்சைகள் : 12

எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கு அவையில் 72 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சியில் 3 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மற்றும் அக்கட்சிக்கு ஒரு சுயேட்சையின் ஆதரவும் இருக்கிறது.

இப்போதைக்கு தனக்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக சொல்லிக்கொள்ளும் சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் குருகிராம் நகரில் முகாமிட்டிருக்கிறார். மறுபுறம், 97 எம்எல்ஏக்கள் தன் இல்லத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்ததாக அசோக் கெலாட் தரப்பு முஷ்டியில் இறங்கியிருக்கிறது.

இப்போது, சச்சின் பைலட் 20 எம்.எல்.ஏ.க்களை தனக்கு சாதகமாக இழுத்தால் சபையில் காங்கிரஸின் பலம் எண்ணிக்கை 102 ஆக குறையும். மேலும் அனைத்து சுயேச்சைகளும் (12), ஒரு ராஷ்டீரிய லோக் தளம் எம்.எல்.ஏவும் பாஜகவுக்கு மாறினால், இரு தரப்பு பலமும் 89 ஆக மாறிவிடும். இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இடம்பெற்று இருக்கும் பல சுயேச்சைகள் அசோக் கெலாட்டிற்கு விசுவாசமானவர்கள் என கருதப்படுவதால் அவர்களை அணிமாறச் செய்வது எளிதான காரியமாக இருக்காது என்பதே அங்குள்ள அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருக்கிறது.

ஆகவே, 20 எம்.எல்.ஏ.க்களை தாண்டி தன்னுடைய அணிக்கு கூடுதல் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் சச்சின் பைலட்டின் திறனும், அனைத்து சுயேட்சைகளையும் தன் பக்கத்தில் இழுக்கும் பா.ஜனதா திறனுமே ராஜஸ்தான் அரசியலில் புயலை கடக்கச் செய்யும். இந்த இரண்டையும் செய்ய முடியவில்லை என்றால் அசோக் கெலாட் தலைமையிலான அரசு பாதுகாப்பாகவே இருக்கும்.

சச்சின் பைலட் தனது ஆதரவாளார்களுடன் பா.ஜனதாவில் சேர்ந்துவிட்டால், கட்சித்தாவல் சட்டப்படி அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையும் குறைந்துவிடும். இதனையடுத்தே கூட்டணிக் கட்சிகள், சுயேச்சை உறுப்பினர்களின் துணையுடன் பா.ஜனதா ஆட்சியமைக்க முயற்சி செய்யும். இவ்விவகாரத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பா.ஜனதா வலையில் சிக்குவாரா சச்சின் பைலட்…?

சச்சின் பைலட்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து சிந்தியா விலகி, ஆட்சியை கவிழ்த்தபோதே பா.ஜனதாவின் அடுத்த குறியானது சச்சின் பைலட்தான் என்று பேசப்பட்டது. அதற்கான முயற்சிகளைப் பா.ஜனதா எடுத்துக்கொண்டேதான் இருந்தது. ஒருபக்கம், ‘இதெல்லாம் காங்கிரஸின் உட்கட்சிப் பிரச்சினையாகும். எங்களுக்கு இதில் துளியும் தொடர்பு இல்லை’ என்று பா.ஜனதா கூறினாலும் தனக்கான தருணத்துக்காக எப்போதுமே காத்திருக்கிறது.

காங்கிரஸ் அரசில் சிறிய கீறல் தென்பட்டாலும் அதைப் பெரிய பிளவாக்கி ஆட்சியை வசப்படுத்தும் அரசியலை அக்கட்சி தொடர்ந்து முன்னெடுக்கிறது. இப்போதும், ராஜஸ்தான் பா.ஜனதா தலைமை, “ராஜஸ்தான் முதல்-அமைச்சராவதற்கு சச்சின் பைலட்தான் தகுதியானவர். ஆனால், அந்த பொறுப்பை அசோக் கெலாட் எடுத்துக்கொண்டுவிட்டார். அதனால்தான் இந்த மோதல் உருவாகியிருக்கிறது” என்று கொழுத்தி போட்டியிருக்கிறது.

சிந்தியா

அதேபோல் மத்திய பிரதேசத்தில் இருந்து சிந்தியாவும், “காங்கிரஸில் திறமைக்கு மதிப்பில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது” என்று கூறிவருகிறார். காங்கிரஸ் முக்கிய இடத்திலிருந்த போதே சிந்தியாவும், சச்சினும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பா. ஜனதா தலைவர்களுடனான சச்சினின் பேச்சுவார்த்தையில் சிந்தியாவுக்கும் பங்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, அவர் பா.ஜனதா வலையில் சிக்கலாம் எனவே கூறப்படுகிறது.

எப்படி சிந்தியா கடைசி நேரத்தில் காங்கிரஸ் தலைமையை சந்திப்பதை மறுத்தாரோ அதுபோன்று சச்சினும் கூட்டத்தில் கலந்துக்கொள்வதை தவித்து உள்ளார். மறுபுறம் மற்றொரு இளம் தலைவரை கட்சி இழந்துவிடக்கூடாது என்பதில் ஸ்திரமாக இருக்கும் பிரியங்கா காந்தியே சச்சின் பைலட்டை சமாதானம் செய்யும் பணியில் களமிறங்கியிருக்கிறார். அவரும் வெற்றிப்பெறுவாரா…? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.