தமிழகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காத்தவராயன் (குடியாத்தம் தொகுதி), கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்) கடந்த பிப்ரவரி மாதத்தில் மரணமடைந்தனர். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றுக்கு ஆளாகி கடந்த மாதம் மரணமடைந்தார். எனவே, கடந்த பிப்ரவரியில் இருந்து இதுவரை 3 தொகுதிகள் காலியாகி உள்ளது.
தற்போது காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா…? என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் நடப்பு சட்டசபையின் பதவிக்காலம் 2021 மே மாதத்துடன் முடிவடையும். சட்டமன்ற பொதுத் தேர்தல் உத்தேசமாக நடத்தப்பட இருக்கும் மாதத்தை (மே மாதம்) கவனிக்கும் போது இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகத்தான் காலம் இருக்கிறது.
விதிமுறை சொல்வது என்ன…?
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறை, ஒரு தொகுதி காலியானதும் 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கிறது. அதன்படி தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த மாதம் ( ஆகஸ்டு) குடியாத்தம், திருவொற்றியூர் ஆகிய 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இருப்பினும், இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலகட்டத்தில் இருந்து (ஆகஸ்டு) தமிழக சட்டமன்ற தேர்தல் உத்தேசமாக நடத்தப்பட இருக்கும் மாதம் வரையில் (மே மாதம்) கணக்கிட்டால், அது ஓராண்டுக்கும் குறைவாகத்தான் உள்ளது. எனவே, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்பது சந்தேகத்துக்கு இடமானதாகவே இருக்கிறது.
நாட்டின் வேறு பல மாநிலங்களிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. இதுபோக பீகார் மாநில சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில் தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுமா…? என்ற கேள்விக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய மாநிலங்களில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
அப்போது, இடைத்தேர்தலுக்குத் தேவையான ஓட்டு எந்திரங்களில் முதல் கட்ட பரிசோதனை செய்யப்பட்டு, அவற்றை தயார் நிலையில் வைப்பது குறித்து தேர்தல் ஆணையம் கேட்டறிந்தது. இருப்பினும், இதுவரையில் இடைத்தேர்தல் நடத்தும் தேதி பற்றி தேர்தல் ஆணையம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்து இருக்கிறார். கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் தேர்தல் நடத்துவது சிரமமான காரியமாகவே இருக்கும். தமிழக சட்டசபையின் பதவி காலமும் மே மாதத்துடன் முடிவடையும் என்பதால் இந்த தொகுதிகளில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் தொடரவே செய்கிறது.